உள்ளூர் செய்திகள்
சோதனை சாவடியில் முற்றுகை போராட்டம் நடத்திய பொதுமக்கள்

ஆதி கருவண்ணராயர் கோவிலுக்கு செல்ல வனத்துறை தடை - பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

Published On 2022-02-16 12:51 IST   |   Update On 2022-02-16 12:51:00 IST
சத்தியமங்கலம் அருகே கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகர் வனச்சரகத்தில் தெங்குமரஹடா செல்லும் வழியில் அடர்ந்த வனப்பகுதியில் ஆதி கருவண்ணராயர் கோவில் அமைந்துள்ளது.

இங்கு வருடம் தோறும் பிப்ரவரி மாதம் 16 ,17 ,18 ஆகிய தேதிகளில் மாசிமகா திருவிழா நடப்பது வழக்கம். இவ்விழாவை காண சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் வருவது வழக்கம். மூன்று நாட்களும் கோவில் வளாகத்தில் கிடா வெட்டி பொதுமக்கள் வழிபட்டு செல்வார்கள்.

அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று தொடங்கியது. இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. திருவிழாவில் பங்கேற்பதற்காக காராச்சி கொரை சோதனைச்சாவடியில் ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்தன. அதில் 100 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடியும் என வனத்துறை கூறினர்.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக மாவட்ட வன அலுவலர் கிருபா சங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Similar News