உள்ளூர் செய்திகள்
ஓசூரில் இரிடியம் இருப்பதாக செம்புக் குடத்தை விற்க முயன்ற தம்பதி உள்பட 5 பேர் கைது
இரிடியம் இருப்பதாக செம்புக் குடத்தை விற்க முயன்ற தம்பதி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் - நல்லூர் சாலையில் உள்ள வாஸ்து சாலா நகரை சேர்ந்த ஸ்ரீதேவி - சிவசங்கர் தம்பதிகள், கடந்த 5-&ந்தேதி வீட்டில் காரில் வந்த 3 நபர்கள் 1 லட்சம் ரூபாய் பணம், ஐந்தரை சவரன் தங்க நகை மற்றும் செல்போன்களை திருடிச் சென்றதாக, ஓசூர் அட்கோ போலீசில் புகார் அளித்திருந்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சப்-&இன்ஸ்பெக்டர் வினோத் குமார் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று, ஓசூரில் போலீசாரின் வாகன சோதனையின்போது, 3 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், சிவசங்கர் தம்பதியர், தங்களது வீட்டில் 1 கோடி ரூபாய் மதிப்புடைய இரிடியம் இருப்பதாக தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் (39) என்பவருக்கு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அரூரை சேர்ந்த வல்லரசு (23), இளையபிரபு (39), ஆகியோர் பன்னீர் செல்வம் மூலம், ஸ்ரீதேவி தம்பதியர் இரிடியம் என வைத்திருந்த செம்புக்குடத்தை பறித்து சென்றதாகவும், இதனை நகை, பணம் திருடியதாக திசை திருப்பி தம்பதிகள் புகார் அளித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
மிகைப்படுத்தி தவறான புகார் அளித்த தம்பதிகளை கைது செய்த போலீசார், மேலும், இரிடியம் தொடர்பாக வியாபாரம் பேசிய பன்னீர்செல்வம் உள்பட 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த செம்புக்குடத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதில் சம்பந்தப் பட்டு தலைமறைவாகியுள்ள, அரூர் பகுதியை சேர்ந்த விஜயபிரபாகரன், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சந்துரு ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து, ஒசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் நிருபர்களுக்கு பேட்டி யளித்த போது,”இரிடியம் எனக்கூறி திரிபவர்களிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும், இல்லாத ஒன்றை தவறாக சித்தரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.