உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நகைக்கடையில் நூதனமுறையில் தங்க நாணயங்கள் திருட்டு

Published On 2022-02-13 15:23 IST   |   Update On 2022-02-13 15:23:00 IST
ஆரணி நகைக்கடையில் நூதனமுறையில் தங்க நாணயங்கள் திருட்டு சம்பவத்தால் பரபரப்பு.
ஆரணி

ஆரணி தணிகாசலம் தெருவை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 70). இவர் அங்குள்ள பெரிய கடைத்தெருவில் நகைக்கடை வைத்துள்ளார். 

நேற்று முந்தினம் அவரது கடைக்கு வந்த நபர் ஒருவர் நவரத்தினக் கற்கள் செட் ஆக வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கான பணத்தை பெற்றுக்கொண்ட அருணாச்சலம் அவர் கேட்ட நவரத்தின கற்களை கொடுப்பதில் கவனம் செலுத்தியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கல்லாவில் இருந்த தலா 2 கிராம் எடை கொண்ட 33 தங்க நாணயங்களை மர்ம நபர் நூதனமாக திருடியுள்ளார். இதை அறியாத அருணாசலம் நவரத்தின கற்களை அவரிடம் கொடுத்தார்.அவற்றைப் பெற்றுக் கொண்ட மர்ம நபர் அங்கிருந்து சென்று விட்டார்.

சிறிதுநேரம் கழித்து கல்லாவை பார்த்த அருணாச்சலம் அதிலிருந்த கால் காசு, தங்க நாணயங்கள் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதையடுத்து அவர் வெளியே வந்து மர்ம நபரை தேடினார்.ஆனால் அவரை காணவில்லை. 

இந்த நூதன திருட்டு குறித்து அக்கம்பக்கத்து கடைக்காரர்களுக்கு தகவல் தெரிவித்தார்.அவர்களும் அந்த நபரை நாலாபுறமும் தேடினர்.

ஏற்கனவே இது போன்று 3 கடைகளுக்கு அந்த நபர் சென்று வந்ததாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.பின்னர் அருணாச்சலம் தனது கடையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை செல்போனில் பதிவிறக்கம் செய்து ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார்.

சப் இன்ஸ்பெக்டர் தர்மன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து நகைகளை திருடிச் சென்ற நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பட்டப்பகலில் நூதன முறையில் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News