உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் புது யுக்தி
திருவண்ணாமலையில் வாக்காளர்களை கவர புது யுக்திகளை கையாளும் வேட்பாளர்கள்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களைகட்டியுள்ளது. நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தினமும் காலை முதல் இரவு வரை பிரச்சாரம் மேற்கொள்கின்றனர் இரவில் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டுகிறது.
தொண்டர்கள் புடைசூழ வீடு வீடாகச் செல்லும் வேட்பாளர்கள் தங்கள் சொந்த செலவில் தெருவில் கண்காணிப்பு காமிரா அமைத்து தருவதாகவும் மற்றும் குடிநீர், கால்வாய் உள்ளிட்ட சில பணிகளை செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்கின்றனர்.
மேலும் அரசின் நலத்திட்ட உதவிகளை தவறாமல் பெற்று தருவதாகவும், குடும்ப நபர்களுக்கு தேவையான சான்றுகளை பெற்று தருவதாகவும் கூறுகின்றனர்.
வேட்பாளர்கள் தங்களது வாக்குறுதிகளை துண்டு பிரசுரங்கள் அச்சடித்து மக்களிடம் வழங்கி வாக்கு கேட்டனர்.
வாக்களிக்கும் மக்களுக்கு அவர்கள் மனம் கவரும் பல பரிசுகளை வழங்க திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். ஒரு சில வேட்பாளர்கள் ஏற்கனவே மக்கள் பணியில் ஆர்வம் காட்டி வந்ததால் அவர்களுக்கு நிச்சயம் வாக்களிப்பதாக பொதுமக்கள் உறுதி அளித்து வருகின்றனர்.
இந்த போட்டியில் வெற்றிவாகை சூடுவது யார்? என்பது விரைவில் தெரியவரும்.
நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்பதில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.