உள்ளூர் செய்திகள்
தேர்தல் பிரசார வாகனங்களுக்கு போலீசில் முறையாக அனுமதி பெற வேண்டும்
தேர்தல் பிரசார வாகனங்களுக்கு போலீஸ் நிலையங்களில் முறையாக விண்ணப்பித்து பிரசார வாகனத்திற்கு அனுமதி பெற வேண்டும் என தேர்தல் பிரிவு டி.எஸ்.பி. தெரிவித்து உள்ளார்.
ஈரோடு:
தேர்தல் பிரசார வாகனங்களுக்கு போலீஸ் நிலையங்களில் முறையாக விண்ணப்பித்து பிரசார வாகனத்திற்கு அனுமதி பெற வேண்டும் என தேர்தல் பிரிவு டி.எஸ்.பி. தெரிவித்து உள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்கு சேகரிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவு டி.எஸ்.பி. அண்ணாதுரை கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வேட்பாளர்கள் பிரசாரம் மேற்கொள்ளலாம் எனவும், பிரசாரத்திற்காக வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டி யிடும் வேட்பாளர்கள் அந்தந்த வார்டுகளுக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் முறையாக விண்ணப்பித்து பிரசார வாகனத்திற்கு அனுமதி பெற வேண்டும்.
இதுதவிர கட்சியின் தலைவர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், நட்சத்திர பேச்சாளர்களின் பிரசாரத்திற்கு நகராட்சி என்றால் டி.எஸ்.பி. அலுவலகங்களிலும், மாவட்டம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அலுவ லகத்தில் விண்ணப்பித்து முன் அனுமதி பெற வேண்டும்.
பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணி க்கையும், வேட்பாளரின் விவரங்களையும் கட்டாயம் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
அனுமதி பெற விண்ணப்பிக்கும்போது, வேட்பாளர் பெயர், அவர் போட்டியிடும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியின் வார்டு எண், பிரசார மேற்கொள்ளும் நாட்களின் எண்ணிக்கை, வாகனத்தின் ஆர்.சி.,புத்தகம், பர்மிட், இன்சூரன்ஸ், புகை பரிசோதனை சான்றிதழ், வாகனத்தின் ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.