உள்ளூர் செய்திகள்
வாழை தோட்டத்தில் தீ விபத்து

சத்தியமங்கலத்தில் வாழை தோட்டத்தில் தீ விபத்து- 400 வாழைகள் எரிந்து சேதம்

Published On 2022-02-13 10:27 IST   |   Update On 2022-02-13 10:27:00 IST
சத்தியமங்கலத்தில் வாழை தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் அடுத்த கரட்டூர் மாமரத்து தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜீ. இவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.

இவர் தோட்டத்தில் 1 ஏக்கர் பரப்பளவில் சுமார் 700 வாழைகள் பயிரிட்டுள்ளார். இந்த வாழைகள் நன்றாக வளர்ந்து காணப்பட்டது. இந்த தோட்டத்தின் மைய பகுதியில் மின்சார டிரான்ஸ் பார்மர் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அவரது தோட்டத்தில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு வாழைகள் தீப்பிடித்து எரிந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜீ மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடிய வில்லை. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் போராடி தீயை அணைத்தனர். ஆனால் இதில் சுமார் 400 வாழைகள் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த டிரான்ஸ்பார்மர் மூலம் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News