உள்ளூர் செய்திகள்
.

கிருஷ்ணகிரியில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2022-02-12 16:12 IST   |   Update On 2022-02-12 16:12:00 IST
கிருஷ்ணகிரியில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி புதுப்பேட்டை செந்தில் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்த 9ம் தேதி கோ பூஜை, கணபதி ஹோமத்துடன்  தொடங்கியது. 

அன்று மாலை கங்கா பூஜை, வாஸ்து பூஜை, கும்பாலங்காரம், அங்குரார்ப்பணம், முதல் காலத்வார பூஜை, வேதிகார்ச்சனை, முதற்கால யாக பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சியும், இரவு 8.30 மணிக்கு மங்களாரத்தி, பிரசாத விநியோகம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடந்தது. இரண்டாம் நாளான 10ம் தேதி காலை மங்கல வாத்தியம், வேத பாராயணம், இரண்டாம் காலய வேதிகார்ச்சனை, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது.

 தொடர்ந்து தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அன்று மாலை மங்கல இசை, வேதபாராயணம், மூன்றாம் கால வேதிகார்ச்சனை, மூன்றாம் கால யாக பூஜை, அஸ்த்ர ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு தீபாராதனை, பிரசாத விநியோகம் சுவாமிக்கு மருந்து சாற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. மூன்றாம் நாளான நேற்று (11ம் தேதி) காலை 5 மணிக்கு மங்கல இசை, வேதபாராயணம், நான்காம் கால வேதிகார்ச்சனை, நான்காம் கால யாக பூஜை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து விமான கலச புறப்பாடு நிகழ்ச்சியும், பின்னர் கோபுர கலச கும்பாபிஷேக நிகழ்ச்சியும் நடந்தது. 

அதைத் தொடர்ந்து மூலாலய கும்ப புறப்பாடு மற்றும் கலசாபிஷேகம், பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தத்வார்ச்சனை, விசேஷ பூஜை, தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த விழாவினையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை தர்மபுரி பாலாஜி சர்மாவின் முழு முதற்கடவுள் என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் செந்தில் நகர் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

Similar News