உள்ளூர் செய்திகள்
மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் கிருஷ்ணகிரியில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் ஒட்டும் பணி துவக்கம்
கிருஷ்ணகிரியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் ஒட்டும் பணி தொடங்கியது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் 170 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் தி.மு.க 30, அ.தி.மு.க 33, பா.ஜ.க 28, நாம் தமிழர் கட்சி 18, பா.ம.க 11, அ.ம.மு.க 4, காங்கிரஸ் 3, எஸ்.டி.பி.ஐ 3, ம.நீ.ம 2 ஆகிய கட்சிகளை சேர்ந்த 129 வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் 41 பேர் என மொத்தம் 170 பேர் களத்தில் உள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் பெயர், கட்சி சின்னம், சுயேச்சைகளுக்கு வழங்கப்பட்ட சின்னம் உள்ளிட்டவைகளை வார்டு வாரியாக பிரிக்கப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஒட்டும் பணி நேற்று தொடங்கியது. கிருஷ்ணகிரி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆணையாளருமான முருகேசன் தலைமையில், நடந்து வரும் பணிகளை, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார் பார்வையிட்டார்.
மண்டல அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பெயர் மற்றும் சின்னம் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் கூறுகையில், கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 66 ஓட்டுச்சாவடிகளுக்கான, 80 கன்ட்ரோல் யூனிட், மற்றும் பேலட் யூனிட் பிரித்து வைக்கப்பட்டு அதில் வேட்பாளர் பெயர் சின்னம் ஒட்டும் பணி நடைபெற்றது. பின்னர் அனைத்து ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பாக அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இது தேர்தல் நடைபெறும் வருகிற 19ந் தேதிக்கு முதல் நாள் உயரதிகாரிகளின் உத்தரவுப்படி, அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பப்படும் என்றார்.