நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தி.மு.க.வினரின் சுயநலம்- அண்ணாமலை ஆவேசம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் நடந்த பிரசார கூட்டத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழகத்தில் விடியலை கொண்டுவருவோம் என்று சொன்ன தி.மு.க.வுக்கு கடந்த சட்டசபை தேர்தலில் வாக்களித்தீர்கள். இதுவரை என்ன விடியலை கொண்டுவந்துள்ளார்கள்? மேலும் குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்றார்கள்.
அரசுக்கு நிதி நெருக்கடி என்று சொல்கிறார்கள். தேர்தல் நேரத்தில் 517 வாக்குறுதிகளை திமுகவினர் கொடுத்தனர்.அதில் எந்த வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. கையாலாகாத அரசாக இந்த அரசு செயல்படுகிறது.
இவர்கள் மக்களை திசை திருப்புவதற்காக பிரதமரையும், மத்திய அரசு திட்டங்களையும் விமர்சிப்பதை குறிக்கோளாக வைத்துள்ளனர்.
திருவண்ணாமலையில் வாரிசு அரசியல் நடக்கிறது. அதற்கு மக்கள் அனுமதிக்கக் கூடாது. திருவண்ணாமலை மக்கள் ஒரு குடும்பத்துக்கு அடிமையாக இருக்க கூடாது.
திருவண்ணாமலையில் மாற்றம் ஆரம்பமாகட்டும். பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஓட்டு போட்டு திருவண்ணாமலையில் மாற்றம் கொண்டு வாருங்கள். அவர்கள் தி.மு.க.வினர் போல லஞ்சம், ஊழலில் ஈடுபட மாட்டார்கள். உங்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்.
சென்னையில் பா.ஜ.க. அலுவலகத்தில் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. நீட் தேர்வை எதிர்த்து குண்டு வீசப்பட்டதாக போலீசார் சொல்கின்றனர் பிடிப்பட்ட குற்றவாளி மீது 7 வழக்குகள் உள்ளன.கொலை முயற்சி வழக்கு கூட உள்ளது.
அவனுக்கும் நீட்தேர்வுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? அவன் நீட்டாக முடித்துவிட்டேன் என்றுசொன்னதை நீட்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து குண்டு வீசினான் என்று சொல்கிறார்கள்.
தமிழகத்தில் பல மருத்துவ கல்லூரிகள் தி.மு.க.வினர் நடத்தி வருகின்றனர். அதில் ஒரு சீட்டுக்கு ரூ.40 லட்சம் பெற முடியவில்லையே என்ற சுயநலத்தில் இதுபோன்ற செயல்களைத் தூண்டி விடுகின்றனர். ஆனால் நீட் தேர்வு மூலம் சாதாரண குடும்பத்தை சேர்ந்த மாணவ- மாணவிகளும் மருத்துவருக்கான கல்வியை பெறுகின்றனர்.
தி.மு.க.வினர் கொடுத்த பொங்கல் பரிசில் மஞ்சளுக்கு பதில் மரத்தூள் இருந்தது.மிளகுக்கு பதில் பருத்திக்கொட்டை இருந்தது.வெல்லம் உருகியதால் பக்கெட் கொண்டு சென்று வாங்கினர். சிலர் வாங்கிய வெல்லத்தில் பல்லிகள் போன்ற உயிரினங்களும் செத்து கிடந்தது. இதுபோன்ற பொங்கல் பரிசை மக்கள் கேட்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.