உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

விவசாயிகளிடம் இருந்து பணம் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

Published On 2022-02-12 15:11 IST   |   Update On 2022-02-12 15:11:00 IST
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து பணம் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ஈரோடு:

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து பணம் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மண்டல மேலாளர்களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியதாவது:-

மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தில் கடந்த அக்டோபர்  மாதம் 1-ந் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்பனை செய்ய ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்து குறுந்தகவலை உறுதி செய்து பட்டியல் எழுத்தர் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

நெல் கொள்முதலுக்கு தேவையான ஆவணங்களை உறுதி செய்த பின்னர் விவசாயிகளை காக்க வைக்காமல் உடனே நெல் கொள்முதல் செய்வதை நிலைய பொறுப்பாளர் உறுதி செய்ய வேண்டும்.

நெல் விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் மூட்டைக்கு தொகை ஏதும் எக்காரணம் கொண்டும் பெறக்கூடாது. 

இது தொடர்பாக புகார் வரும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர், சுமை தூக்கும்பணியாளர்கள், கொள்முதல் அலுவலர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்மந்தப்பட்ட துணை மேலாளர் (கொள்முதல் மற்றும் இயக்கம்) மற்றும் கொள்முதல் அலுவலர்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் நெல் கொள்முதலில் எவ்வித இடையூறும் இல்லாததை உறுதி செய்ய வேண்டும். 

இச்சுற்றறிக்கையை கடைபிடிக்க தவறினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு  அவர் அதில் கூறியுள்ளார்.

Similar News