உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் கொரோனா பரவல் திடீரென குறைந்த மாயம்
திருவண்ணாமலையில் கொரோனா பரவல் வேகமாக குறைந்து வருகிறது.
திருவண்ணாமலை:
தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா 3-வது அலை வேகம் காட்டியது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு ஊரடங்கு உத்தரவுகள் பல விலக்கப்பட்டன.
தற்போது மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை மறந்து அனைத்து இடங்களுக்கும் சென்று வருகின்றனர். வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பூங்கா மற்றும் சுற்றுலாத் தலங்கள் செல்ல தடை நீடிக்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 700-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரவி வந்த நிலையில் தற்போது வெகுவாக குறைந்துள்ளது.
எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில் எப்படி கொரோனா கட்டுக்குள் வந்தது என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் கொரோனா தொற்று வந்து செல்கிறது. மேலும் பலர் தங்களுக்கு காய்ச்சல், இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்தாலும மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு சரி செய்து கொள்கின்றனர்.
அவர்கள் பரிசோதனை செய்துகொள்ளாதால் அவர்களுக்கு கொரோனா வந்ததா? இல்லையா? என்பது தெரியாமல் இருக்கின்றது. ஆனால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுபற்றி சுகாதார அதிகாரிகள் கூறுகையில்:-
தேர்தலுக்கு பின்னர்தான் உண்மையான நிலவரம் தெரியவரும். அப்போது அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
தற்போது கிராமங்களில் இருந்து நகரத்துக்கும், நகரங்களில் இருந்து கிராமத்துக்கும் அதிகளவில் மக்கள் சென்று வருகின்றனர்.
மேலும் மக்கள் அதிகளவில் கூடும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றது. இவை எல்லாம் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே மக்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏற்பாடுகளுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றனர்.