உள்ளூர் செய்திகள்
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
மனைவி, குழந்தைகள் தன்னை விட்டு பிரிந்து விட்டார்கள் என்ற மன வருத்தத்தில் இருந்து வந்த தொழிலாளி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து இறந்தார்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அருகே லட்சுமனபுரம் பண்ணாரி ரோடு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (37). தொழிலாளி. இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங் களுக்கு முன்பு வித்யா கணவருடன் கோபித்து கொண்டு குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
மனைவி, குழந்தைகள் தன்னை விட்டு பிரிந்து விட்டார்கள் என்ற மன வருத்தத்தில் இருந்து வந்த பழனிசாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கினார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.