உள்ளூர் செய்திகள்
தச்சம்பட்டு போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்ட போது எடுத்த படம்.

காப்புக்காடு பகுதியில் கிராம மக்களை மிரட்டி நகை-பணம் பறிக்கும் கும்பல்

Published On 2022-02-11 15:13 IST   |   Update On 2022-02-11 15:13:00 IST
திருவண்ணாமலை அருகே காப்புக்காடு பகுதியில் செல்லும் கிராம மக்களை மிரட்டி நகை&பணம் பறிக்கும் கும்பலை பிடிக்க கோரி போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மணலூர்பேட்டை செல்லும் சாலையில் உள்ள காப்புக்காடு பகுதியில் வழிபறி மற்றும் கத்தியைக் காட்டி மர்ம நபர்கள் செயின் மற்றும் பணம் பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் தச்சம்பட்டு போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் தொடர் வழிபறியில் ஈடுபட்டுவரும் குற்றவாளிகளை கைது செய்யாமல் மெத்தனமாக இருக்கும் போலீசாரை கண்டித்து பாவுப்பட்டு, காட்டாம்பூண்டி, பறையம்பட்டு, பழையனூர், நரியாபட்டு, தச்சம்பட்டு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தச்சம்பட்டு போலீஸ்நிலையத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தச்சம்பட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட வந்த பொதுமக்களை போலீஸ் நிலையத்திற்குள் செல்லவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாவுப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டனை வழிமறித்து மர்ம கும்பல் அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ரூ.60ஆயிரம் ரொக்கத்தை பறித்துச் சென்றுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். 

மேலும் இரவு நேரங்களில் போலீசார் காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும். காப்புக்காடு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தனர்.

காப்புக்காடு பகுதியில் உள்ள கிராமங்களுக்கு பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில்தான் அதிகமாக செல்கின்றனர். இந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் பாதுகாப்பு குறைபாடு ஏற்படுகிறது. இதனை கொள்ளையர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். 

எனவே போலீசார் ரோந்து வாகனங்களை அந்த வழியில் இயக்கவும், ஆங்காங்கே புறக்காவல் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுத்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று கூறப்படுகிறது.

Similar News