உள்ளூர் செய்திகள்
சலூன் கடையில் வேலை பார்த்து கொண்டு வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்

ஈரோடு மாநகராட்சி தேர்தலில் போட்டி - சலூன் கடையில் வேலை பார்த்து கொண்டு வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்

Published On 2022-02-11 13:39 IST   |   Update On 2022-02-11 13:39:00 IST
என் உழைப்பை நம்பி கட்சி என் மீது நம்பிக்கை வைத்து மாநகராட்சியின் 48-வது வார்டில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது என வேட்பாளர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:

ஈரோடு மாநகராட்சி 48-வது வார்டில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிவஞானம் என்பவர் போட்டியிடுகிறார்.

இவர் சூரம்பட்டி அணைக்கட்டுப் பகுதியில் சொந்தமாக சலூன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளதால் கடந்த சில நாட்களாக சிவஞானம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதே நேரம் வாக்கு சேகரிக்கும் நேரம் போக மற்ற நேரம் கடைக்கு சென்று வாடிக்கையாளர்களுக்கு சவரம் செய்தபடியே அவர்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நூதனமான பிரசாரம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து சிவஞானம் கூறும்போது, நான் கடந்த 20 வருடமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறேன். எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பாராமல் கட்சிக்காக உழைத்து வருகிறேன். அதேநேரம் என் வாழ்வாதாரத்துக்காக சொந்தமாக சலூன் கடை நடத்தி தொழில் செய்து வருகிறேன். என் உழைப்பை நம்பி கட்சி என் மீது நம்பிக்கை வைத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியின் 48-வது வார்டில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி வெற்றி பெறுவேன். இந்த பகுதி மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன் என்றார். 

Similar News