உள்ளூர் செய்திகள்
வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்
வேளாண் பட்டதாரிகள் அரசு மானியம் பெற்று தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
வேளாண் பட்டதாரிகள் அரசு மானியம் பெற்று தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை&உழவர் நலத்துறை மூலம் நடப்பு 2021-22-ம் நிதியாண்டில் இருந்து ‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த மாவட்டத்தில் 60 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்துகளை சார்ந்த வேளாண் பட்டதாரிகளை தொழில்முனைவோர் ஆக்கும் நோக்கத்தில் ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வீதம் 8 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சம் மானியம் வழங்க இலக்கு நிர்ணியக்கப் பட்டுள்ளது.
திட்டத்தில் பயன் பெற விரும்பும் பயனாளிகள் குறைந்தபட்சம் இளநிலை வேளாண்மை, தோட்டக்கலை அல்லது வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு படித்து இருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறையில் பணியாற்று பவராக இருக்கக் கூடாது. கணிணி மற்றும் இதர வேளாண் செயலிகளில் பணியாற்றத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஒரு பட்டதாரி மட்டுமே திட்டத்தில் பயன்பெற முடியும். முன்வைக்கும் திட்டத்தின் உரிமையானது ஒற்றை உரிமையாளருடையதாக இருக்க வேண்டும். நிலம் மற்றும் தளவாடங்களுக்கான செலவு முன் வைக்கும் திட்ட மதிப்பில் சேர்க்க இலாது. 21 முதல் 40 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின் கீழ் அக்ரி கிளினிக், இயற்கை உரம் தயாரித்தல், மரக்கன்று உற்பத்தி செய்தல், நாற்றங்கால் பண்ணை அமைத்தல், பசுமை குடில் அமைத்தல், உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை நிலையம் அமைத்தல், வேளாண் மருந்தகம் தொடங்குதல், நுண்ணீர் பாசன சேவை மையம் தொடங்குதல், வேளாண், தோட்டக்கலை விளை பொருட்களை மதிப்புக் கூட்டுதல், சந்தைபடுத்துதல் போன்ற வேளாண் சார்ந்த தொழில்களை தொடங்க நிதியுதவி அளிக்கப்பட உள்ளது.
தொழில் முனைவோராக விருப்பமுள்ள வேளாண் பட்டதாரிகள் உரிய விண்ணப்பத்துடன் 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பட்டதாரி சான்றிதழ், ஆதார் அட்டை, ரேசன் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து விரிவான திட்ட அறிக்கையினை வரும் 18-ந் தேதிக்குள் திண்டல் வித்யா நகரிலுள்ள ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.
எனவே, தொழில் முனைவோராக விருப்பமுள்ள வேளாண் பட்டதாரிகள் இத்திட் டத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.