உள்ளூர் செய்திகள்
போராட்டம்

கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்

Published On 2022-02-09 15:30 IST   |   Update On 2022-02-09 15:30:00 IST
கடந்த 2021-ம் ஆண்டு பட்டு நூல் ரூ.3,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது பட்டு நூல் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.6,500 வரை விலை உயர்ந்து விற்பனையாகிறது.
ஈரோடு:

ஈரோடு, கோவை, திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைதறிகள் உள்ளன. இந்த பகுதிகளில் அதிகளவு பட்டு சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள் தமிழகம், கர்நாடகா உள்பட பல மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஈரோடு, சென்னி மலை, சத்தியமங்கலம் மற்றும் புஞ்சை புளியம்பட்டி, பவானிசாகர் உள்பட பல்வேறு பகுதிகளில் விசைத்தறி மற்றும் கைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பேர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள்.

மேலும் பெங்களூரு மற்றும் சீனாவில் இருந்து பட்டு நூல் மற்றும் கச்சா பொருட்களை கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்து வருகிறார்கள். இதன் மூலம் பட்டு சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பட்டு நூல் மற்றும் கச்சாப் பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கைத்தறி பட்டு உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு பட்டு நூல் ரூ.3,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது பட்டு நூல் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.6,500 வரை விலை உயர்ந்து விற்பனையாகிறது.

இது குறித்து கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கைத்தறி பட்டு சேலை தயார் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல் மூலப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதே போல் பட்டு நூல் விலையும் பல மடங்கு உயர்ந்து காணப்படுகிறது.

ஆனால் பட்டு சேலைகள் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. இதனால் பட்டு சேலைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. நூல் விலையை குறைக்க மத்திய அரசு மற்றும் ஜவுளி அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதை கண்டித்து ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் நாளை (வியாழக்கிழமை) முதல் வரும் 20-ந் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு பட்டு நூல் வார்ப்பதையும், நெசவு செய்வதையும் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் கைத்தறி நெசவாளர்கள், பாவு வீசும் தொழிலாளர், நூல் சாயமிடும் தொழிலாளர்கள், ஜக்காடு அட்டை அடிக்கும் தொழிலாளர்கள் என பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

Similar News