உள்ளூர் செய்திகள்
பண்ருட்டியில் பஞ்சாயத்து தலைவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த நபர் கைது
ஊராட்சி மன்ற தலைவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த ராமசாமியை கைது செய்த போலீசார் பண்ருட்டி கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி ஒன்றியம் மருங்கூர் பஞ்சாயத்து தலைவர் வாசுகி (வயது 40) இவர் தனது கணவர் துளசியுடன் நேற்று மாலை தனது வீட்டு வாசலில் நின்றார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவர் அங்கு வந்தார்.அப்போது வாசுகியிடம் எனது வீட்டுக்கு அமைத்த குடிநீர் குழாயில் தண்ணீர் வரவில்லை என தெரிவித்தார். அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி நாளைக்கு சரிவர தண்ணீர் வரும் என்று கூறினார். ஆத்திரமடைந்த ராமசாமி பஞ்சாயத்து தலைவர் வாசுகியை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கி கீழே தள்ளி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதனை தடுக்க வந்த வாசுகி கணவரையும் தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து ஊராட்சி மன்ற தலைவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த ராமசாமியை கைது செய்து பண்ருட்டி கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.