உள்ளூர் செய்திகள்
கோப்புப் படம்.

இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு

Published On 2022-02-07 15:01 IST   |   Update On 2022-02-07 15:01:00 IST
நகர்புற உள்ளாட்சி தேர்தலின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு செய்யப்பட்டு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஈரோடு:

நகர்புற உள்ளாட்சி தேர்தலின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு செய்யப்பட்டு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளுக்கு போட்டியிடுவதற்காக மொத்தம் 3,301 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில் பல்வேறு காரணங்களால் 64 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 

தற்போது மாவட்டம் முழுவதும் 3,237 வேட்பாளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இன்று மாலை 3 மணி வரை வேட்புமனுக்கள் திரும்ப பெற அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது. 

தி.மு.க.வை பொறுத்தவரை ஈரோடு மாநகராட்சியில் 46 வார்டுகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 14 வார்டுகள் கூட்டணிக்கட்சிகளாக ஒதுக்கப்பட்டுள்ளன. 

அ.தி.மு.க.  57 வார்டுகளில் போட்டியிடுகின்றனர். த.மா.கா 3 வார்டுகளில் போட்டியிடுகிறது. 

இது தவிர தே.மு.தி.க., பாரதிய ஜனதா, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆகிய கட்சிகள் தனித்தும் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

இதில்  தி.மு.க. வில் தேர்தலில் சீட்டு கிடைக்காத நிர்வாகிகள் சிலர் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 

இவ்வாறு சுயேச்சையாக போட்டியிடுபவர்கள் பட்டியல் ஏற்கனவே கட்சித் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைமையை மீறி போட்டியிட வேண்டாம் என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எனவே அவர்கள் இன்று தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையடுத்து இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியலுடன், சின்னமும் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் தேர்தல் காலம் இன்னும் சூடு பிடிக்க தொடங்கி விடும். 

Similar News