உள்ளூர் செய்திகள்
தமிழ்ப் பதிகம் பாடி அடைக்கப்பட்ட திருக்கதவு திறக்கும் ஐதீகத் திருவிழா
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தமிழ்ப் பதிகம் பாடி அடைக்கப்பட்ட திருக்கதவு திறக்கும் ஐதீகத் திருவிழா நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ரிக், யஜூர், சாம, அதர்வண ஆகிய நான்கு வேதங்களும் இறைவனை வழிபட்டு வந்ததாகவும், பின்னர், கோவிலின் பிரதான கதவுகளை மூடிச் சென்றதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.
பின்னாளில், இந்தக் கோவிலுக்கு வந்த சமயக் குரவர்களான
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய இருவரும் தேவாரத்
தமிழ்ப் பதிகம் பாடியதால் கதவு மீண்டும் திறந்ததாகவும் இதில் அப்பர் சுவாமிகள் பாடலில் கதவைத் திறக்கவும், சம்பந்தர் பாடலில் கதவை
மீண்டும் திருக்காப்பு செய்ததாகவும் ஐதீகம்.
இதை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மகப் பெருவிழாவின்போது, தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறக்கும் விழா
நடைபெற்று வரும் நிலையில் மூடிப்பட்டிருந்த வெள்ளிக்கவச
திருக்கதவின் எதிரே அப்பர், சம்பந்தர் ஆகியோர் எழுந்தருள, இவர்களாக உருவகப்படுத்தப்பட்ட ஓதுவா மூர்த்திகளான ஆசான் முத்துக்குமாரசுவாமி, பரஞ்ஜோதி தேசிகர் கொண்ட குழுவினர் தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடினர்.
அப்போது 10 திருப்பதிக பாடல்களுக்கு பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருக்கதவு திறக்கப்பட்டடு மணவாள சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.
இதில் கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திரன், யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சன்னதி குடும்பத்தினர், ஸ்தலத்தார் கயிலை மணி வேதரத்னம், நகராட்சி பொறியாளர் மோகன் உட்பட ஏராளமான பக்தர்கள், சிவனடியார்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.