உள்ளூர் செய்திகள்
கடலூரில் களை கட்டிய அரசு அலுவலகங்கள்

வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்று கடைசி நாள் - கடலூரில் களை கட்டிய அரசு அலுவலகங்கள்

Published On 2022-02-04 17:25 IST   |   Update On 2022-02-04 17:25:00 IST
இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இறுதி நாட்கள் என்பதால் காலை முதல் திமுக அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர்.
கடலூர்:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ந் தேதி கடலூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி 6 நகராட்சிகள் 14 பேரூராட்சிகளில் நடைபெற உள்ளன. இதனையொட்டி கடலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் தேர்தல் ஆணையம் அறிவித்த நாள் முதல் சுயேட்சை அரசியல் கட்சி பிரமுகர்கள் ஒருசிலர் அந்தந்த அலுவலகங்களில் வேட்புமனுத்தாக்கல் செய்துவந்தனர்.

இந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் நேற்று மற்றும் இன்று அனைத்து வேட்பாளர்களும் காலை முதல் தங்கள் ஆதரவாளர்களுடன் அந்தந்த அலுவலகங்களில் நேரில் சென்று வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இறுதி நாட்கள் என்பதால் காலை முதல் திமுக அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் குவிக்கப்பட்டிருந்த போலீசார் தீவிர சோதனைக்கு பிறகு தேர்தல் ஆணையம் அறிவித்த குறிப்பிட்ட நபர்கள் மட்டும் அனுபவித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலக வளாக பகுதிகளிலும் வேட்பாளருடன் ஆதரவாளர்களை கும்பலாக நிற்பதற்கு அனுமதிக்கவில்லை. இதுமட்டுமின்றி வேட்பாளர் ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்வதற்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் கடும் கெடுபிடி விதித்து அனுமதித்தனர்.

மேலும் அவருடன் வந்தவர்களை அலுவலக வளாகத்தில் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் இன்று மாலை 5 மணிக்குள் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என கட்டுப்பாடுகள் இருந்து வருவதால் ஏராளமான வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.

Similar News