உள்ளூர் செய்திகள்
அரசு பஸ்சை வழிமறித்து பொதுமக்கள் போராட்டம்
பயணிகளை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறி அரசு பஸ்சை வழிமறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அய்யாதுரை சந்து பகுதியில் வசித்து வரும் சிக்கந்தர், குடும்பத்தினருடன் மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் அரசு பஸ்சில் திருப்பத்தூர் வருவதற்காக ஏறினார்.
அப்போது கண்டக்டர் திருப்பத்தூர் பயணிகளை ஏற்ற முடியாது என்று கூறினார். காரணம் கேட்டபோது கண்டக்டர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து சிக்கந்தர் திருப்பத்தூரில் தனது ஊர்க்காரர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் பொதுமக்கள் திருப்பத்தூர் காவல் நிலையம் முன்பு தஞ்சாவூர் செல்லும் அரசு பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம், சப்இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர். அதன் பின்னர் சம்பவ இடத்தில் இருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மேலும் இதுகுறித்து சிக்கந்தர், திருப்பத்தூர் டவுன் போலீசில் அரசு பஸ் களண்டக்டர் குமரன் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு கொடுத்தார். மதுரையில் இருந்து திருப்பத்தூருக்கு தனியார் பஸ்கள் இயக்க மறுக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் பல போராட்டங்கள் நடத்தினர்.
தற்போது இதுபோன்ற பிரச்சினைகள் இல்லாமல் இருந்து வந்த நிலையில் அரசு பஸ் கண்டக்டர் இதுபோன்று பயணிகளை அலைக்கழிப்பு செய்வது வேதனையாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்தனர்.