உள்ளூர் செய்திகள்
ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்தம், சில்லரை வியாபாரம் அடியோடு பாதிப்பு
நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி ஈரோட்டில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்தம், சில்லரை வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டது.
ஈரோடு:
நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி ஈரோட்டில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்தம், சில்லரை வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டது.
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் அருகே புகழ்பெற்ற ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) இயங்கி வருகிறது. இங்கு தினசரி கடைகளும், வார சந்தையும் நடந்து வருகிறது. வாரச்சந்தை திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய் க்கிழமை மாலை வரை நடைபெரும்.
இந்த வார சந்தையில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஈரோட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும், கோவை, சேலம், கரூர், திண்டுக்கல், நெல்லை, தென்காசி போன்ற மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள். சந்தை நாட்களில் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும்.
இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக கடந்த 3 வாரம் ஜவுளி சந்தை விற்பனை கடுமையாக பாதிக்கப் பட்டது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இதனையடுத்து பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் பணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இதன் காரணமாக இன்று நடந்த ஜவுளி சந்தையில் வெளிமாநிலங்களில் இருந்து ஒரு வியாபாரிகளும் வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டது.
இதேப்போல் மாவட்டங்களில் இருந்தும் ஒரு வியாபாரிகளும் வரவில்லை. இதனால் சில்லரை வியாபாரமும் அடியோடு பாதிக்கப்பட்டது. பொதுவாக ஜவுளி சந்தைக்கு வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் ரூ.10 லட்சம் முதல் குறைந்தது ரூ.1 லட்சம் வரை கொண்டு வருவார்கள்.
தற்போது தேர்தல் நடத்தை காரணமாக வியாபாரிகள் பணம் கொண்டுவர தயங்கி இன்று நடந்த சந்தைக்கு வரவில்லை. இன்னும் ஒரு மாதத்திற்கு இதே நிலைமை தான் நீடிக்கும் என ஜவுளி வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.