உள்ளூர் செய்திகள்
பள்ளியில் கிருமிநாசினி தெளிக்கும் மாநகராட்சி பணியாளர்.

நாளை பள்ளிகள் திறப்பு:முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

Published On 2022-01-31 15:15 IST   |   Update On 2022-01-31 15:15:00 IST
கொரேனா தொற்று குறைய தொடங்கியதால் நாளை பள்ளிகள் திறக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை பள்ளி நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.
ஈரோடு:

கொரேனா தொற்று குறைய தொடங்கியதால் நாளை பள்ளிகள் திறக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை பள்ளி நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியது. 

தொடக்கத்தில் தினசரி பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. 

தமிழக அரசு இதை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கடந்த 6-ந் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

இதுபோல் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மற்றொரு தடுப்பு நடவடிக்கையாக முதலில் ஒன்றாம் வகுப்பு முதல்  12 வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் மீண்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகளில் பங்கேற்று வந்தனர். 

ஈரோடு மாவட்டத்திலும் மாணவ-மாணவிகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வந்தனர். இதேபோல் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது தினமும் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. 

இதனையடுத்து மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் அவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நாளை  முதல் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. 

இதையடுத்து அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை மூலம் பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிவளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. 

ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை பொறுத்தவரை 1-ம் வகுப்பில் 24,572 மாணவர்கள், 2---ம் வகுப்பில் 25,629, 3-ம் வகுப்பில் 26,052, 4-ம் வகுப்பு 27, 618, ஐந்தாம் வகுப்பு 29, 362, ஆறாம் வகுப்பு 27,432, ஏழாம் வகுப்பு 27, 887, எட்டாம் வகுப்பு 28,968, ஒன்பதாம் வகுப்பு 29,038, பத்தாம் வகுப்பு 28,438, பிளஸ்- 1 26,496, பிளஸ்- 2 25,070 என 3 லட்சத்து 26 ஆயிரத்து 562 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். 

நாளை முதல் 100 சதவீதம் வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ மாணவிகள் நாளை பள்ளிக்கு வர தயாராகி வருகின்றனர். கொரோனா காலகட்டம் என்பதால் அரசு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்புகளுக்கு வரும் மாணவ,-மாணவிகள் பின்பற்ற வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 
மாணவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக கவசம் அணியாத மாணவர்களுக்கு பள்ளி சார்பில் முக கவசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

பள்ளி வகுப்பறை நுழைவாயிலில் மாணவர்களின் உடல் வெப்ப நிலையை தெரிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட உள்ளது. 

இதில் சாதாரண வெப்ப நிலையை தாண்டி கூடுதலாக காண்பிக்கப்பட்டால் அந்த மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ குழுவினர் உடல்நிலையை பரிசோதனை செய்து அதற்குத் தகுந்தாற்போல் சிகிச்சை அளிப்பார்கள். 

மேலும் அந்தந்த பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.

Similar News