உள்ளூர் செய்திகள்
தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம்

கடனுதவி பெற தொழில் முனைவோர் விண்ணப்பிக்க அழைப்பு

Published On 2022-01-30 16:08 IST   |   Update On 2022-01-30 16:08:00 IST
சிவகங்கை மாவட்டத்தில் கடனுதவி பெற புதிய தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை

சிவகங்கை மாவட்ட  கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு  இளைஞரையும் தொழில் முனைவோராக உருவாக்குவதற்கு புதிய தொழில் தொடங்க முதல் தலைமுறை இளைஞர்களுக்கான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தை மாவட்டத் தொழில் மையம் மூலமாக செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரை வங்கிகள் மூலம் கடனுதவி பெறவும், தமிழக அரசின் மானியமாக திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்ச மானியம் ரூ.75 லட்சமாக உயர்த்தி வழங்கவும்,  மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதலாக 10 சதவீத  மானியம் வழங்கவும்  தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

மேலும், வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில்¢ 3 சதவீத வட்டி மானியமாகவும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வரையறுக்கப்பட்ட வங்கிகள், தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி,  தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் மற்றும் தமிழ்நாடு கிராம வங்கிகள் மூலமாகவும் கடனுதவி வழங்கப்படுகிறது. மகளிருக்கு 50 சதவீத ஒதுக்கீடும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு சிறப்பு ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம்  கடனுதவி பெற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். தற்போது குறைந்தபட்ச கல்வி தகுதியாக 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.  21 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். 

பொதுப்பிரிவினர் 35 வயதுக்குள்ளும் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். 

ஏற்கனவே மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் மானியத்துடன் கடன் பெற்றவர்கள் கடனுதவி பெற இயலாது. விவசாயம், வாகனம் மற்றும் மாசினை ஏற்படுத்தும் தொழில்கள் தவிர்த்து ஏனைய உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம்.  

தகுதியுள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விபரங்களை பூர்த்தி செய்து அதன் நகல் மற்றும் சான்றிதழ்களுடன் இணை இயக்குநர் - பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சிவகங்கை-630 562 என்ற விலாசத்திற்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு சிவகங்கை மாவட்டத் தொழில் மைய பொது மேலாளரை நேரிலோ அல்லது அலுவலர்களை 89255 33991, 89255 33990 மற்றும் 89255 33989 என்ற செல்லிடபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News