உள்ளூர் செய்திகள்
தருமபுரி உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை வெகுவாக குறைந்து காணப்பட்டது. இதனால் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

தருமபுரி உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை சரிவு

Published On 2022-01-30 07:59 GMT   |   Update On 2022-01-30 07:59 GMT
தருமபுரி உழவர் சந்தையில் இன்று காய்கறி விலை குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டத்தில், விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. பாலக்கோடு, மாரண்டஅள்ளி, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் காய்கறி பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். 

குறிப்பாக காய்கறி பயிர்களில் கத்தரிக்காய், முள்ளங்கி, அவரைக்காய், சுரைக்காய், பீன்ஸ், புடலங்காய், தக்காளி, உள்ளிட்ட ஏராளமான காய்கறி வகைகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கால் தமிழக அரசு கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் அன்றாட காய்கறி மார்க்கெட்டிற்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைவால் ஒரு கிலோ கத்திரிக்காய் 100 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 80 ரூபாய்க்கும், தக்காளி 70 ரூபாய்க்கும், விற்பனையாகி வந்தது.

தற்போது தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  தருமபுரி மாவட்டத்தில் இருந்து மார்க்கெட்டிற்கு காய்கறிகளின் வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது.
  
அதனால் இன்று உழவர் சந்தையில் தக்காளி  ரூ.14, வெண்டைக்காய் ரூ.16,  அவரை ரூ.40,  புடலங்காய் ரூ.12, கத்தரிக்காய் ரூ.20, முள்ளங்கி ரூ.6, பீன்ஸ் ரூ.30 என காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தருமபுரி உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க மக்கள் குவிந்தனர். விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் இன்று காய்கறிகளை ஆர்வமாக வாங்கிச் சென்றனர்.

Tags:    

Similar News