உள்ளூர் செய்திகள்
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று முதல் நிறுத்தம்
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று முதல் நிறுத்தப்பட்டு உள்ளது. கூடுதலாக 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சத்தியமங்கலம்:
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று முதல் நிறுத்தப்பட்டு உள்ளது. கூடுதலாக 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15--ந் தேதி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் நன்செய் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.
அதற்கான கால அவகாசம் ஜனவரி 15-ந் தேதி முடிவடைந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு உத்தரவின்படி மேலும் 10 நாட்களுக்கு பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலில் திறந்து விடப்பட்டடது.
இந்நிலையில் இன்று காலை முதல் நிறுத்தம் கீழ்பவானி வாய்க்காலுக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 98.81 அடியாகவும், நீர் இருப்பு 27.80 டி.எம்.சியாகவும் உள்ளது.
அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 1521 கன அடியாக உள்ள நிலையில் அணையிலிருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்திற்கு 800 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கன அடி நீர் என மொத்தம் 900 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மழைக்காலத்தின் போது கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல நாட்கள் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனால் பயிர் சாகுபடி பராமரிப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டு தற்போது தான் பயிர்கள் பால் பிடிக்கும் பருவத்தில் வந்துள்ளன.
அறுவடைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இன்று முதல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே கால்வாய் அடைப்பு ஏற்பட்ட போது தண்ணீர் நிறுத்தம் செய்யப்பட்ட நாள்களைக் கணக்கிட்டு கூடுதலாக மேலும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட்டு பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழ்பவானி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.