உள்ளூர் செய்திகள்
கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம்.

கட்டுப்பாடுகளுடன் மீண்டும் மாடு விடும் விழா நடத்த அனுமதி

Published On 2022-01-24 15:13 IST   |   Update On 2022-01-24 15:13:00 IST
வேலூர் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் மாடு விடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளுடன் காளை விடும் விழா நடத்த மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாடு விடும் விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். 

இதில் ஜல்லிக்கட்டு கண்காணிப்பு குழு உறுப்பினர் எஸ்.கே. மிட்டல் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். அவர் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் நடந்த மாடு விடும் விழாக்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டது.இதனால் மாவட்ட நிர்வாகம் மாடு விடும் விழா நடத்த தற்காலிகமாக தடை விதித்தது. இதனை பாராட்டுகிறேன்.

மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி விழாக்குழுவினர், காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடு விடும் விழாவில் கலந்து கொள்ளும் பொது மக்கள் தாங்களாக முன்வந்து கட்டுப்பாடுகளுடன் நடந்துகொள்ளவேண்டும்.

மாடு விடும் விழாக்களில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் காயம் அடைந்து வருவதாக செய்திகள் வருகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.

ஜாலியாக மாடு விடும் விழா காண வருகிறீர்கள். ஆனால் ஒரு சில உயிரிழப்புகள் ஏற்பட்டு சோகமாக செல்லும் நிலை உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் கவலை அளிக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளுடன் கொரோனா விதிகளை கடைபிடித்து மாடு விடும் விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.

மீண்டும் விதிமீறல்கள் ஏற்பட்டால் உச்சநீதிமன்ற உதவியுடன் 2 ஆண்டுகளில் இதுபோன்ற மாடு விடும் விழாக்கள் நடத்த முற்றிலும் தடை விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News