உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

மாடு விடும் விழாக்கள் தற்காலிகமாக நிறுத்தம்

Published On 2022-01-23 08:22 GMT   |   Update On 2022-01-23 08:22 GMT
வேலூர் மாவட்டத்தில் மாடு விடும் விழாக்கள் தற்காலிகமாக நிறுத்தம் செய்ய கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மாடு விடும் விழாக்களில் விதிமுறைகள் மீறப்படுவதாக புகார்கள் வந்துள்ள நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கோட்டாட்சியர்களுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விசாரணை அறிக்கைகளை பரிசீலனை செய்து மறுஉத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வரை மாவட்டத்தில் மாடு விடும் விழாக்கள் நடத்த தற்காலிகமாக தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தைப்பொங்கலை யொட்டி வேலூர் மாவட்டத்திலுள்ள 120 கிராமங்களில் எருது விடும் விழாக்கள் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. 

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த எருது விடும் விழாக்கள் கடந்த 15-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தன.

எனினும் கிராமப்புறங்களில் நடைபெறும் இந்த மாடு விடும் விழாக்களில் மாவட்ட நிர்வாகம் அனுமதித்த அளவை மீறி ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பதும், அளவுக்கு அதிகமான எருதுகள் அவிழ்த்து விடப்படுவதும் நடைபெற்று வந்தன.

இதன்காரணமாக பேர்ணாம்பட்டு அருகே கள்ளச்சேரி கிராமத்தில் 13 வயது சிறுவன், வேலூர் வட்டம் கீழ்அரசம்பட்டு கிராமத்தில் 60 வயது முதியவர், லத்தேரி அருகே பனமடங்கி கிராமத்தில் 13 வயது சிறுமி ஆகியோர் எருது விடும் விழாக்களில் மாடு முட்டி உயிரிழந்தனர். 

தவிர, இதுவரை 15 இடங்களில் நடைபெற்ற மாடு விடும் விழாக்களில் நூற்றுக்கணக்கானோர் காயமும் அடைந்துள்ளனர்.
இத்தகைய விதிமுறை மீறல்களை தடுத்திட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எருது விடும் விழாக்கள் நடத்துவதற்கு கடந்த திங்கள்கிழமை புதிய நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டிருந்தார். 

அதன்படி, அனுமதிக்கப்பட்ட கிராமங்களில் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே மாடு விடும் விழா நடத்தப்பட வேண்டும், வேறு கிராமங்கள், மாவட்டங்களில் இருந்து வரும் காளைகளை அனுமதிக்கக் கூடாது. 

அந்தந்த கிராமத்தில் நடைபெறும் விழாவில் அந்தந்த கிராம மக்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். அளவுக்கதிகமான எண்ணிக்கையில் மக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும், நிபந்தனைகள் மீறப்பட்டால் எருதுவிடும் விழாக்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், மாவட்டத்தில் மாடு விடும் விழாக்களில் விதிமுறை மீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன.

அதனடிப்படையில், கடந்த 15-ஆம் தேதி முதல் சனிக்கிழமை (ஜன. 22) வரை நடைபெற்ற மாடு விடும் விழாக்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்திட சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விசாரணை அறிக்கை கிடைக்கப் பெற்று அதன் சாராம்சங்களை பரிசீலனை செய்து மறுஉத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வரை வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News