உள்ளூர் செய்திகள்
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபரை பத்திரமாக போலீசார் மீட்ட காட்சி.

ஈரோடு ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது தவறி விழுந்த வடமாநில வாலிபர்

Published On 2022-01-22 04:11 GMT   |   Update On 2022-01-22 04:11 GMT
ஈரோடு ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது தவறி விழுந்த வடமாநில வாலிபர் போலீசார் ஓடி சென்று காப்பாற்றிய வீடியோ காட்சிகள் வெளியானது

ஈரோடு:

ஈரோடு வழியாக தினமும் ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வட மாநிலத்திலிருந்து தினமும் 50- க்கும் மேற்பட்ட ரெயில்கள் ஈரோடு வழியாக வந்து செல்கின்றன.

இதில் நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பயணம் மேற்கொண்டு ஈரோட்டுக்கு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் செகன்திராபாத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் கிளம்பியது.

இதில் அசோக்தாஸ் என்ற வாலிபர் முன்பதிவு செய்து பணித்துள்ளார். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

விடுமுறைக்கு ஊருக்கு சென்றவர் மீண்டும் ஈரோட்டுக்கு திரும்பி ரெயிலில் வந்து கொண்டிருந்தார். நேற்று ஈரோடு ரெயில் நிலையத்திற்கு அசோக்தாஸ் பயணம் செய்த ரெயில் வந்து நின்றது. அப்போது அசோக்தாஸ் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார். இதனால் ரெயில் ஈரோட்டுக்கு வந்தது அவருக்கு தெரியவில்லை.

பின்னர் ரெயில் பயணிகளை இறக்கி விட்டு கிளம்பத் தொடங்கியது. ரெயில் கிளம்ப தொடங்கியதும் கண்விழித்து பார்த்த அசோக்தாஸ் ஈரோடு ரெயில் நிலையத்தில் ரெயில் கிளம்பியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவசர அவசரமாக எழுந்து தனது உடமைகளை முதலில் வெளியே தூக்கி வீசினார். பின்னர் அசோக்தாஸ் ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்றார். அப்போது அவர் தவறி நடைமேடைக்கும் ரெயிலுக்கும் இடையே அவரது ஒரு கால் சிக்கி கொண்டது. அவர் ரெயிலில் தொங்கியபடி சென்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த தலைமை காவலர்கள் பழனிசாமி மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு அசோக்தாசை பிடித்து இழுத்து அவரை காப்பாற்றினர்.

பின்னர் அவருக்கு புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தனர். ரெயில்வே போலீசார் வடமாநில வாலிபரை காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. துரிதமாக செயல்பட்டு வடமாநில வாலிபரை காப்பாற்றிய தலைமை காவலர்களை போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News