உள்ளூர் செய்திகள்
கைது செய்யப்பட்ட டேவிட், ராஜ்கமல்.

ஈரோடு: பிரபல கொள்ளையர்கள் 2 பேர் வாகன சோதனையில் கைது

Published On 2022-01-21 07:27 GMT   |   Update On 2022-01-21 07:27 GMT
ஈரோட்டில் வாகன சோதனையில் பிரபல கொள்ளையர்கள் 2 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து நகை-பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு:

ஈரோட்டில் வாகன சோதனையில் பிரபல கொள்ளையர்கள் 2 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து நகை-பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம், தாசன்காட்டுபுதூரை சேர்ந்தவர் அருள் நாகலிங்கம் (வயது 40). சித்த மருத்துவர். இவரது வீட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19-ந் தேதி மர்மநபர்கள் புகுந்து 20 பவுன் நகைகள், ரூ.4 லட்சம் ரொக்கபணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் டவுன் டி.எஸ்.பி.ஆனந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் கொள்ளையர்களை தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று மொடக்குறிச்சி போலீசார் கேட்புதூர் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அந்த காரை போலீசார் நிறுத்தினர். காரில் 2 வாலிபர்கள் இருந்தனர். அவர்கள் குறித்த விவரங்களை போலீசார் கேட்டனர்.

அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை விசாரணைக்காக மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், பிரகாஷ்நகரை சேர்ந்த ராஜ்கமல் (31) என்பதும், மற்றொருவர் திருச்சி மாவட்டம் துவாக்குடி, வசந்தம் நகரைச் சேர்ந்த டேவிட் (29) என்பதும் தெரியவந்தது. இருவரும் நண்பர்கள்.

இருவரும் சேர்ந்து சித்தமருத்துவர் வீட்டில் 20 பவுன் நகைகள், ரூ.4  லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர்.

இதுதவிர மொடக்குறிச்சி கேட்புதூரில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகைகள், சின்னியம்பாளையத்தில் ஒரு பவுன் நகை, ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு வீட்டில் ஒரு கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளை அடித்ததையும் ஒப்பு கொண்டனர்.  

மேலும் இவர்கள் திருவண்ணாமலை, மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து மொடக் குறிச்சி போலீசார் இருவ ரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 24 பவுன் நகைகள், ரூ .6 லட்சம் ரொக்கப்பணம்,  ஒரு கிலோ வெள்ளி மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய ஒரு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பவானி கிளைச்சிறையில் அடைக்கப் பட்டனர்.

Tags:    

Similar News