உள்ளூர் செய்திகள்
கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் மாடுகள் விற்பனை நடந்த போது எடுத்தப்படம்.

கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வராததால் வியாபாரம் மந்தம்

Published On 2022-01-20 14:40 IST   |   Update On 2022-01-20 14:40:00 IST
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் வியாபாரம் மந்தமாக காணப்பட்டது.
ஈரோடு:

கொரோனாகட்டுப்பாடுகள் காரணமாக கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் வியாபாரம் மந்தமாக காணப்பட்டது.

ஈரோடு, கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கமாகும். இந்த மாட்டுச் சந்தைக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ,கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வருவது வழக்கம். 

இதுபோல் உள்ளூர் வியாபாரிகளும் அதிக அளவில் வருவார்கள். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இரவுநேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. 

இதன் காரணமாக கடந்த மூன்று வாரமாக மாட்டுச் சந்தைகளில் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. குறிப்பாக கேரளாவில் இருந்து மாட்டுச்சந்தைக்கு 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக வியாபாரிகள் வர தயங்குகின்றனர். 

இதனால் கடந்த சில வாரமாக கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில் வியாபாரம் மந்த நிலையிலேயே காணப்படுகிறது. இந்நிலையில் இன்று கூடிய மாட்டுச்சந்தையில்  250 பசு மாடுகள், 175 எருமை மாடுகள், 75 கன்றுகள் என மொத்தம் 500 மாடுகள் மட்டுமே வரத்தாகி இருந்தது. கடந்த வாரத்தை காட்டிலும் இதன் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இன்று கூடிய மாட்டுச்சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் யாரும் வரவில்லை. 

 உள்ளூர், திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து ஒரு சில வியாபாரிகள் வந்தனர். இன்று விற்பனை மந்தமாகவே இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Similar News