உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

டி.என்.பாளையத்தில் பிளஸ்-1 மாணவி தீக்குளித்து தற்கொலை

Published On 2022-01-18 13:02 IST   |   Update On 2022-01-18 13:02:00 IST
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தில் பிளஸ்-1 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டி.என்.பாளையம்:

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் குமரன்கோவில் வீதியை சேர்ந்தவர் ரவி. இவர் டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு திருமணமாகி தமிழ் அமுது (வயது 15) என்ற மகளும், தமிழ்வாணன் என்ற மகனும் உள்ளனர். தமிழ் அமுது அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்த வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று தமிழ் அமுது வீட்டில் இருந்த மாத்திரையை எடுத்து சாப்பிட்டார். இது குறித்து மாணவியிடம் அவரது தந்தை ரவி கேட்டார். அப்போது எனக்கு வாழ பிடிக்கவில்லை. அதனால் மாத்திரை சாப்பிட்டதாக கூறினார். இதை தொடர்ந்து தமிழ் அமுது பேசிக்கொண்டு இருக்கும் போதே திடீரென வீட்டின் பின்புறம் ஓடிச்சென்று அங்கிருந்த மண்எண்ணையை எடுத்து தன் உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனால் அவர் அலறி துடித்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தை ரவி தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். இதில் தமிழ் அமுது உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். தமிழ் அமுதுவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் டி.என்.பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து கோபி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழ் அமுது பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News