உள்ளூர் செய்திகள்
தடுப்பூசி (கோப்பு படம்)

மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி- தொலைபேசியில் தொடர்பு கொண்டால் வீடுகளுக்கு வந்து போடப்படும்

Published On 2022-01-17 10:59 GMT   |   Update On 2022-01-17 10:59 GMT
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி ஒன்றே சிறந்த தீர்வு என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி விரைந்து செலுத்தப்பட்டு வருகிறது.
சென்னை:

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி ஒன்றே சிறந்த தீர்வு என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி விரைந்து செலுத்தப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2-ம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு 9 மாதங்கள் அதாவது 39 வாரங்களை கடந்த சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஆகியோருக்கு மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் உள்ள தடுப்பூசி மையங்கள் ஆகியவற்றில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும், இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த மாநகராட்சியின் 1913, 044-2538 4520 மற்றும் 044-4612 2300 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களுடைய விவரங்களை பதிவு செய்தால், அவர்களின் இல்லங்களுக்கு மருத்துவப் பணியாளர்கள் மூலம் நேரடியாக சென்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும், பயணிக்கக் கூடிய நிலையில் உள்ள மற்றும் விருப்பமுள்ள இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் உள்ள கொரோனா தடுப்பூசி மையங்களில் நேரில் சென்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளலாம்.

மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் செயல்பட்டு வரும் மாநகராட்சியின் தடுப்பூசி மையங்களின் விவரங்களை மாநகராட்சியின்  <http://covid19.chennaicorporation.gov.in/covid/gcc_vaccine_centre/>  என்ற இணையதள இணைப்பில் தெரிந்து கொண்டு தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாக சென்றும் தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளலாம். அவ்வாறு செல்லும் பொழுது, 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது மாநகராட்சி தடுப்பூசி முகாமில் மருத்துவரால் வழங்கப்பட்ட தடுப்பூசி அட்டை மற்றும் ஆதார் போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையை உடன் கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News