திண்டிவனத்தில் பஸ் ஏற முயன்ற பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட விருத்தாசலம் பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ் ஏற முயன்ற பெண்ணிடம் நகை பறிப்பு - விருத்தாசலம் பெண் கைது
பதிவு: ஜனவரி 13, 2022 15:30 IST
கைது
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சாரம் மருத்துவமனை குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராஜசேகர். அவரது மனைவி செல்வ சங்கீதா.
இவர் நேற்று மாலை திண்டிவனம் கடைவீதிக்கு வந்துவிட்டு தனது வீட்டுக்கு செல்வதற்காக திண்டிவனம் மேம்பாலம் அருகே உள்ள சென்னை பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது பஸ் வந்தவுடன் அங்கு வந்த ஒரு பெண், செல்வ சங்கீதாவை இடித்தபடி பஸ்சில் ஏறி உள்ளார்.
அப்பொழுது அவர் கையில் வைத்திருந்த பர்சை அந்த பெண் அபேஸ் செய்து அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். அதிர்ச்சி அடைந்த செல்வ சங்கீதா கூச்சல்போட்டார். சத்தம் கேட்டு அங்கு ரோந்து பணி மேற்கொண்ட திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் போலீஸ் கோமதி அங்கு வந்தார்.
தப்பி ஓடிய பெண்ணை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அந்தப் பெண்மணி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த முத்துவேல் என்பவரது மனைவி தேன்மொழி என தெரியவந்தது. உடனே அந்த பெண்ணை கைது செய்தனர். இதனை தொடர்ந்து அந்தப் பெண்மணியிடம் இருந்து பர்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பர்சில் 2 சவரன் செயின், 2 சவரன் வளையல், 3 சவரன் நெக்லஸ், 2 கிராம் டாலர் உள்ளிட்ட நகைகள் இருந்தன.