உள்ளூர் செய்திகள்
முக கவசம்

கொரோனா பரவாமல் தடுக்க பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்- போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை

Published On 2022-01-07 18:37 IST   |   Update On 2022-01-07 18:37:00 IST
கொரோனா பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி அறிவுரை வழங்கினார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பரவாமல் தடுக்க காவல் துறை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரியில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிப்பது, முக கவசம் அணிவது குறித்து மாவட்ட காவல் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், முக கவசம் அணியாதவர்களுக்கு முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் நேற்று மாலைநடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி தலைமை தாங்கி பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு முக கவசம் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். முக கவசம் அணியாமல் வெளியே செல்வதால் நாம் பாதிக்கப்படுவதோடு,நம்மால் பலருக்கு தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளி, முக கவசம், சானிடைசர் பயன்படுத்தியும், அடிக்கடி கைகளை கழுவியும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா, சேலம் ரோடு, பழைய சப்-ஜெயில் ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள், உள்ளிட்டோருக்கு போலீசார் முக கவசங்களை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜூ, விவேகானந்தன், துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News