உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

சிறு தானியங்கள் அபிவிருத்தி கண்காட்சி

Published On 2022-01-06 13:27 IST   |   Update On 2022-01-06 13:27:00 IST
அவிநாசி வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து வேளாண்மை அலுவலர் சுஜி விளக்கினார்.
அவிநாசி:

அவிநாசி வட்டாரம் புதுப்பாளையம் கிராமத்தில் ஊட்டச்சத்துமிக்க சிறு தானியங்கள் அபிவிருத்திக்கான கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தேசிய உணவு பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன் தலைமை தாங்கினார். 

ஊட்டச்சத்து மிக்க தானியங்களான சோளம், கம்பு சாகுபடி குறித்த கையேட்டை வெளியிட்டு விவசாயிகளுக்கு அதுசார்ந்த தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினார்.

பிறகு சோளம் கோ 30, கம்பு தன்சக்தி ரகங்களை அறிமுகப்படுத்தி அதன் குணாதிசயங்களை விளக்கினார். குமரகுரு வேளாண் கல்லூரி மாணவர்கள் மூலம் விதைகளுடன் உயிர் உரங்கள், விதை நேர்த்தி செய்வது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

அவிநாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அருள்வடிவு, தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் மாலதி ஆகியோர் தங்கள் துறை சார்ந்து மேற்கொள்ளப்படும் பணிகள், அரசு திட்டங்கள் குறித்து விளக்கினர்.

அவிநாசி வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து வேளாண்மை அலுவலர் சுஜி விளக்கினார். உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைத்தல் மற்றும் அதிக லாபம் பெறுவதற்கான வழிமுறை குறித்து வேளாண்மை அலுவலர் ரம்யா விளக்கினார்.

தரிசு நில மேம்பாடு மற்றும் வாடகை எந்திரங்களை பயன்படுத்துதல் குறித்து வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் மஞ்சு விளக்கினார். சிறு தானியங்கள் சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் சாலை விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது. 

நிகழ்ச்சியில்  உதவி வேளாண்மை அலுவலர் வினோத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முகாமிற்கான ஏற்பாடுகளை அவிநாசி வட்டார அலுவலர்கள் செய்திருந்தனர்.

Similar News