உள்ளூர் செய்திகள்
பேரணாம்பட்டு அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தில் வாலிபர் படுகொலை
புத்தாண்டு கொண்டாட்டத்தில் திடீரென ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி அருகே கொத்தமாரி குப்பத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் வினித் (வயது23). ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று நள்ளிரவு அந்த கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவில் அருகே இளைஞர்கள் ஒன்றுகூடி புத்தாண்டை கொண்டாடினர். இதில் வினித் கலந்துகொண்டார்.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த அசோகன் (44) அவரது மகன் ஆகாஷ் (23) ஆகியோர் அங்கு வந்தனர். அவர்களுக்கும் வினித்தின் உறவினர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அதனை வினித் தட்டிகேட்டார்.
அப்போது அசோகனும் அவரது மகனும் சேர்ந்து வினித்தை கட்டையால் தாக்கினர். மேலும் கத்தியால் வினித்தை குத்தினர். இதில் நிலைகுலைந்த வினித் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
புத்தாண்டு கொண்டாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வினித்தை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு மற்றும் மேல்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக அசோகன், ஆகாஷ் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தில் திடீரென ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.