உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

தமிழகத்தில் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - உழவர் உழைப்பாளர் கட்சி வலியுறுத்தல்

Published On 2021-12-20 09:27 GMT   |   Update On 2021-12-20 09:27 GMT
டீசல் விலை உயர்வால் பல்வேறு தொழில்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல்லடம்:

தமிழகத்தில் டீசல் விலையை குறைக்க வேண்டும் என உழவர் உழைப்பாளர் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் செல்லமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:

டீசல் விலை உயர்வால் பல்வேறு தொழில்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். டீசல் விலை உயர்வு, லாரி வாடகை உயர்வு போன்றவற்றால் காய்கறி விலை உயர்கிறது. மத்திய அரசு சமீபத்தில் டீசல் வரியை குறைத்தது. 

இதையடுத்து அருகில் உள்ள மற்ற மாநிலங்களில் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளன. அதுபோல தமிழகத்திலும் டீசல் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை பாதிப்பு என்பது உலகம் முழுக்க பொதுவானது. 

தற்பொழுது தமிழகத்தில் அதிக மழை பெய்துள்ளது. இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் முன்கூட்டியே திட்டமிட்டு காய்கறிகளை கிடங்குகளில் சேமித்து வைக்கவோ அல்லது வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யவோ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தட்டுப்பாடு காரணமாக மணல் இறக்குமதி செய்வதுபோல் காய்கறிகள் இறக்குமதி செய்ய வேண்டும். தற்போது கிடைத்த அனுபவத்தை கொண்டு அதிகாரிகளை வைத்து முன்கூட்டியே பருவமழை காலங்களில் காய்கறிகளை கிடங்குகளில் சேமிக்கவும், இறக்குமதி செய்யவும் அரசு தயாராக இருக்க வேண்டும். 

மேலும் விதை, உரம் போன்றவைகளை மானிய விலையில் வழங்கி விவசாயிகளை காய்கறிகள் உற்பத்தி செய்ய அரசு ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News