உள்ளூர் செய்திகள்
குன்னூரில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் குறித்து கணக்கெடுப்பு பணி நடந்தபோது எடுத்த படம்.

குன்னூரில் நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் கணக்கெடுப்பு

Published On 2021-12-17 09:49 GMT   |   Update On 2021-12-17 09:49 GMT
குன்னூரில் நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஊட்டி:

தமிழகத்தில் கால்வாய்கள், நீரோடைகள், ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து கணக்கெடுக்க வேண்டும் என்று அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

அதுபோன்று மலைமாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் குறித்து வருவாய்த்துறையினர் தீவிரமாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று குன்னூரில் வருவாய்த்துறையினர் ராஜாஜி நகர், அம்பேத்கர் நகர், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கால்வாய்கள், ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் ஆக்கிரமித்து வீடுகள், கட்டிடங்கள் கட்டப்பட்டது குறித்து கணக்கெடுத்தனர்.

வரைபடம் கொண்டு நவீன கருவி உதவியுடன் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடம் எவ்வளவு, ஆக்கிரமிக்கப்பட்ட இடம் குறித்து அளவீடு செய்து கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து கணக்கெடுக்கப்பட்டு இதுகுறித்த விவரம் மாவட்ட நிர்வாகத்துக்கு அளிக்கப்பட உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு குன்னூர் எம்.ஜி.ஆர்.நகர், சுறாகுப்பம் பகுதிகளில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. அவர்களுக்கு மாற்றிடம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News