உள்ளூர் செய்திகள்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அரசு பள்ளி ஆசிரியர் கைது
கோத்தகிரி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரியில் உள்ள அரசு பள்ளியில் கோத்தகிரி டானிங்டன் பாரதி நகரை சேர்ந்த முரளிதரன் (வயது 46) என்பவர் வரலாறு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, கன்னத்தை தொடுவது என மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளான மாணவிகள் 12 பேர் இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியையிடம் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து தலைமை ஆசிரியை, சோலூர்மட்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி, ஆசிரியர் முரளிதரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.