உள்ளூர் செய்திகள்
கைது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு வாரத்தில் குட்கா பதுக்கி விற்ற 60 பேர் கைது

Published On 2021-12-14 09:25 GMT   |   Update On 2021-12-14 09:25 GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு வாரத்தில் குட்கா பதுக்கி விற்ற 60 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம்:

குட்கா, பான்மசாலா விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. எனினும் தடையை மீறி கடைகளில் குட்கா விற்கப்பட்டு வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்திலும் குட்கா விற்பனை நடந்து வருகிறது. இதையடுத்து குட்கா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் தலைமறைவு ரவுடிகள், கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தார்.

இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். இதில் கடந்த ஒரு வாரத்தில் குட்கா, பான்மசாலா விற்பனையில் ஈடுபட்ட 60 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சரித்திர பதிவேடு ரவுடிகளான பெரிய காஞ்சிபுரம் முகமது இலாகி, ரமேஷ், சிறுபாக்கம் ஆனந்தன், கிளார் ராஜா, தாமல் இளவரசு உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நரசிங்கபுரம் தண்டபாணி, வடமங்கலம் விஜய், அஸ்சாம் மாநிலத்தை சேர்ந்த ருகல் அகமது உள்ளிட்டோரும் சிக்கினர்.

மாவட்டத்தில் சட்ட விரோதமான நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

கடந்த ஒரு வாரத்தில் போலீசாரின் அதிரடி சோதனையில் 4 ரவுடிகள், கஞ்சா விற்பனை செய்த 10 பேர் மற்றும் குட்கா விற்ற 60 பேர் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News