செய்திகள்
புதுவையில் இன்று அதிகாலை பெய்த மழை காரணமாக கடலூர் சாலையில் தேங்கிய மழை வெள்ளம்

வெள்ளத்தில் தத்தளிக்கும் புதுவை- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Published On 2021-11-29 07:48 GMT   |   Update On 2021-11-29 10:35 GMT
புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 104.72 செ.மீ. மழை பெய்துள்ளது. நேற்று காலை 237.6 செ.மீ மழை பெய்துள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு விடிய விடிய பரவலாக மழை பெய்தது. இன்று அதிகாலை பலத்த மழை பெய்தது.

மழை காரணமாக புதுவை நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. ரெயின்போ நகர், பாவாணர் நகர், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

புஸ்சி வீதி, கடலூர் சாலை, மறைமலை அடிகள் சாலை, இந்திராகாந்தி சிலை, சிவாஜி சிலை ஆகிய பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் வாகனங்களில் செல்வோர் அவதி அடைந்தனர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

பெரிய வாய்க்காலில் மழைநீர் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியது. புதுவையில் நேற்று பெய்த கனமழை காரணமாக சண்டே மார்க்கெட் முழுமையாக இயங்கவில்லை. ஒரு சில கடைகள் மட்டுமே செயல்பட்டது.

இன்று 4-வது நாளாக மழை பெய்து வருகிறது. இதேபோல் புதுவையின் புறநகர் பகுதியான பாகூர், மதகடிப்பட்டு, காலாப்பட்டு, வில்லியனூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.

மழை காரணமாக பாகூர் மூலநாதர் சாமி கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பக்தர்கள் தண்ணீரில் இறங்கி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் பாகூர் பகுதியில் விளைநிலங்களிலும் தண்ணீர் புகுந்துள்ளது.

மழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அவர்களின் விசைப்படகுகள் தேங்காய் திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



புதுவையில் வடகிழக்கு பருவமழை 26-ந்தேதி தொடங்கினாலும் அதற்கு முன்பாக வளிமண்டல மேலடுக்கு சுழற்கி காரணமாக 27 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 104.72 செ.மீ. மழை பெய்துள்ளது. நேற்று காலை 237.6 செ.மீ மழை பெய்துள்ளது. இது ஆண்டு சராசரியை விட 75 சதவீதம் அதிகமாகும்.

கடந்த 2014-ம் ஆண்டு அதிகபட்சமாக 229.38 செ.மீ. மழை பெய்தது. 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.



Tags:    

Similar News