செய்திகள்
கோப்புபடம்

கொரோனா சற்று அதிகரிப்பால் அச்சம் - காய்ச்சலால் ஆஸ்பத்திரியில் அலைமோதும் பொதுமக்கள்

Published On 2021-11-27 07:34 GMT   |   Update On 2021-11-27 07:34 GMT
கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. 57, 59 ஆக பதிவாகி வந்த பாதிப்பு நேற்று முன்தினம் 65 ஆக உயர்ந்தது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மாதம் தொடர்ந்து குறைந்து வந்த கொரோனா பாதிப்பு 17 நாட்களுக்கு பின் சற்று அதிகரித்துள்ளது. மாத தொடக்கத்தில் திருப்பூர் மாவட்டத்தின் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 66 ஆக இருந்தது. 

தீபாவளி முடிந்த பின் பாதிப்பு குறைய தொடங்கியது.கடந்த 16-ந்தேதி நான்கு மாதங்களாக இல்லாத அளவாக 50க்கும் கீழ் ஒரு நாள் பாதிப்பு 47 ஆக குறைந்தது. இதனால் மாவட்ட சுகாதார துறையினரும், பொதுமக்களும் ஆறுதல் அடைந்தனர். 

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. 57, 59 ஆக பதிவாகி வந்த பாதிப்பு நேற்று முன்தினம் 65 ஆக உயர்ந்தது. இந்த மாதத்தில்  7-ந்தேதி 62 பேருக்கு கொரோனா உறுதியானது. அதன் பின் 18 நாட்களாக தொடர்ந்து பாதிப்பு குறைந்து வந்தது. 

தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தில் நான்கு பேர் தொற்றுக்கு பலியாகிய நிலையில், இந்த வாரம் மூன்று நாட்களுக்குள்7 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில்,

தொற்று பரவல் தடுக்க தேவையான அனைத்து விழிப்புணர்வும் மேற்கொள்ளப்படுகிறது. பலரும் முககவசம் அணிவதை தவிர்த்து வருகின்றனர். இவ்வாறு செய்வது தவறானது. எங்கு சென்றாலும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றனர்.

இதனிடையே தாராபுரத்தில் அதிவேகமாக பரவும் காய்ச்சல் எதிரொலியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தாராபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. 

தாராபுரம் காமராஜபுரம், சீதாநகர், கிறிஸ்தவ அனுப்ப தெரு, பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குவிகின்றனர். 

இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை எடுத்த பின்னரும் 3 நாட்கள் காய்ச்சலும் அதன் தொடர்ச்சியாக தொண்டைவலி, இருமல், உடல்வலி ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். இதனால் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சாதாரண காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்த பின்னர் குணமாகிவிடும் நிலையில் சிகிச்சை எடுத்தாலும் தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சலும் அதன் தொடர்ச்சியாக பக்க விளைவுகளும் ஏற்படுவதால் இது ஏதோ மர்மக்காய்ச்சலாக இருக்குமோ என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

சுகாதார துறையினர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கையில் ஈடுபட்டு காய்ச்சலால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு செய்யவேண்டும். மேலும் சிறப்பு முகாம்கள் அமைத்து அந்தந்த பகுதிகளில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கடந்த ஒருவார காலமாக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவில் தினசரி சுமார் 120க்கும் மேற்பட்டோர்கள் காய்ச்சலுக்காக சிகிச்சை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
Tags:    

Similar News