செய்திகள்
முல்லை பெரியாறு அணை

முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது

Published On 2021-11-22 11:10 GMT   |   Update On 2021-11-22 11:10 GMT
நீர்பிடிப்பு பகுதியில் மழை நின்றதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது.
கூடலூர்:

கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக மழை கைகொடுத்ததால் குறிப்பிட்ட நேரத்தில் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழையால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. ஆனால் கேரள அரசு 142 அடி தண்ணீர் தேக்க தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அவ்வப்போது கேரள பகுதிக்கு வீணாக தண்ணீர் திறந்து விடுவது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது நீர் பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்துள்ளது. இதனால் நேற்று 3104 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1992 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து மின் உற்பத்தி நிலையம் வழியாக 1800 கன அடியும், இரைச்சல் பாலம் வழியாக 200 கன அடியும் என மொத்தம் 2000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 168 கன அடி நீர் கேரளாவுக்கு உபரியாக திறக்கப்படுகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 69.42 அடியாக உள்ளது. 2387 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2355 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை 55 அடியாக உள்ளது. 46 கன அடி நீர் வருகிற நிலையில் 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.47 அடியாக உள்ளது. 106 கன அடி நீர் வருகிறது. இதில் 30 கன அடி பாசனத்திற்கும், 76 கன அடி நீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.
Tags:    

Similar News