செய்திகள்
விஷ்ணு சகஸ்ர நாமம் படியுங்கள்

ஆத்ம ஞானம் மேம்படுத்தும் பாபா காட்டிய பாதை...விஷ்ணு சகஸ்ர நாமம் படியுங்கள்

Published On 2021-11-18 19:46 IST   |   Update On 2021-11-18 19:46:00 IST
பாரம்பரியமாக விஷ்ணு சகஸ்ர நாமத்தை இறைவனுடன் இரண்டற கலப்பதற்காக சொல்லி வருகிறார்கள். இதில் உள்ள ஒவ்வொரு பெயரும் ஏதாவது ஒரு நல்ல குணத்தை காட்டுவதாக அமைந்துள்ளது.
விஷ்ணு சகஸ்ரநாமம் என்பது மகாபாரதத்தில் பீஷ்மர் போர்க்களத்தில் யுதிஷ்டிரருக்கு போதித்த ஆயிரம் நாமங்கள் கொண்ட பகுதியாகும். சகஸ்ரம் என்றால் ஆயிரம் என்று பொருள். நாமம் என்றால் பெயர் என்று அர்த்தம். ஆயிரம் பெயர்களை வகைப்படுத்துவது இந்த பகுதியின் சிறப்பாகும்.

பாரம்பரியமாக விஷ்ணு சகஸ்ர நாமத்தை இறைவனுடன் இரண்டற கலப்பதற்காக சொல்லி வருகிறார்கள். இதில் உள்ள ஒவ்வொரு பெயரும் ஏதாவது ஒரு நல்ல குணத்தை காட்டுவதாக அமைந்துள்ளது.  இந்த ஆயிரம் பெயர்களையும் சொல்வது என்பது புண்ணிய நதிகளில் நீராடுவதைவிட அதிக பலன்களை தரும் என்பது ஐதீகம்.

விஷ்ணு சகஸ்ரநாமத்தின் பெயர் தொகுப்பில் கிருஷ்ண அவதாரத்தின் ரகசியம் அடங்கி இருப்பதாக சொல்வார்கள். ஆலய வழிபாடுகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி அர்ச்சணை செய்வதை சிறப்பானதாக கருதுகிறார்கள். வீடுகளில் விஷ்ணு சகஸ்ரநாமத்தை தினமும் உச்சரிப்பவர்கள் செல்வ செழிப்பு, வம்ச விருத்தி, புகழ் உள்ளிட்ட அனைத்து பலன்களையும் பெறுவார்கள் என்று நம்பிக்கை உள்ளது. இத்தகைய சிறப்படைய விஷ்ணு சகஸ்ர நாமத்தை தினமும் படியுங்கள் என்று தன்னை நாடி வரும் ஒவ்வொரு பக்தர்களிடமும் சீரடி சாய்பாபா வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

சீரடி சாய்பாபா தன் பக்தர்களுக்கு காட்டிய தனித்துவமான பாதைகளில் விஷ்ணு சகஸ்ர நாமத்தை அவர் படிக்க சொன்னதும் ஒரு தனிப்பாதையாகும். பாபாவின் பக்தர்களில் ஒருவரான தாஸ்கனு கீர்த்தனைகள் பாடுவதில் வல்லவர். அவரை விஷ்ணு சகஸ்ர நாமத்தை படிக்க வைத்து சீரடி பாபா செம்மைபடுத்தினார். தாஸ்கனு சீரடிக்கு வரும்போதெல்லாம் அங்குள்ள பெருமாள் கோவிலில் அமர்ந்து விஷ்ணு சகஸ்ர நாமத்தை பாராயணம் செய்யும்படி சீரடி சாய்பாபா உத்தரவிட்டார். சில சமயங்களில் தாஸ்கனுவுடன் அமர்ந்து வேறு சில பக்தர்களையும் அவர் விஷ்ணு சகஸ்ர நாமத்தை பாராயணம் செய்ய சொல்வதுண்டு.

விஷ்ணு சகஸ்ரநாமத்தின் சிறப்பு பற்றி சீரடி சாய்பாபா பலதடவை பலவிதமாக சொல்லி உள்ளார். ஒரு தடவை சாய்பாபாவை தரிசனம் செய்வதற்காக ராமதாசி என்ற பக்தர் சீரடிக்கு வந்து இருந்தார். அவர் எப்போதும் தன்னிடம் நிறைய பாராயண புத்தகங்களை வைத்து இருப்பார். சாய்பாபா முன்பு அமர்ந்து அந்த பாராயண புத்தகங்களை படித்துக் கொண்டே இருப்பார். அதில், விஷ்ணு சகஸ்ரநாமமும் இடம்பெற்று இருக்கும். ராமதாசி சீரடியில் இருந்த அதே சமயத்தில் பாபாவின் மற்றொரு பக்தரான ஷாமா என்பவரும் வந்து இருந்தார். ராமதாசிக்கும், ஷாமாவுக்கும்  சுத்தமாக பிடிக்காது. எப்போதும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டே இருப்பார்கள். அவர்களை திருத்த முடிவு செய்த சாய்பாபா, திருவிளையாடல் ஒன்றை நடத்தினார்.

பாபாவின் எதிரே அமர்ந்திருந்த ராமதாசியை அழைத்து, ‘‘எனக்கு தாங்க முடியாத வயிற்று வலி வந்துவிட்டது. குடலே வெடித்துவிடும் போல் இருக்கிறது. நான் எவ்வளவோ முயன்றும் வயிற்று வலி நிற்கவில்லை. உடனடியாக கடைக்கு சென்று கொஞ்சம் மருந்து வாங்கி வாருங்கள். மருந்தை சாப்பிட்டால்தான் இந்த வயிற்று வலி போகும் போல் தெரிகிறது’’ என்றார்.
அதோடு வயிற்று வலியால் அவதிப்படுவது போலவும் நடித்தார்.

இதைக்கண்டு பதறிப்போன ராமதாசி, உடனடியாக எழுந்து கடைத்தெருவை நோக்கி நடந்தார். அடுத்த நிமிடம் பாபா தனது இருக்கையில் இருந்து எழுந்து ராமதாசி வைத்திருந்த புத்தகங்கள் ஒவ்வொன்றாக எடுத்து பார்த்தார். அதில் இருந்த விஷ்ணு சகஸ்ரநாம புத்தகத்தை எடுத்து வந்து ஷாமாவிடம் கொடுத்தார்.

‘‘ஷாமா இது மிகவும் புனிதமான நூல். இதைப்பற்றி உனக்கு எதுவும் தெரியுமா? இது மங்களம் தரக்கூடியது. ஆகவே இந்த புத்தகத்தை உனக்கு நான் தருகிறேன். இன்று முதல் இந்த புனித நூலை நீ வாசித்து வர வேண்டும். தினமும் ஒரு பாடல் வீதம் படித்து பொருளை உணர்ந்து புரிந்துகொள். இதற்கான பலன் உனக்கு மிகுதியாக கிடைக்கும். பிற்காலத்தில் இதன் மூலம் நீ மிகப்பெரிய பலன் அடைவாய்’’ என்றார்.

ஆனால் விஷ்ணு சகஸ்ரநாமம் புத்தகத்தை பாபாவிடம் இருந்து வாங்கிக் கொள்ள ஷாமா மறுத்தார். இந்த புத்தகம் சமஸ்கிருதத்தில் உள்ளது. எனக்கு சமஸ்கிருதம் படிக்கத் தெரியாது. மொழி தெரியாமல் எதற்காக வைத்து இருக்க வேண்டும்? மேலும் ராமதாசி என் மீது எப்போதும் வெறுப்பில் இருக்கிறார். இந்த புத்தகத்தை நான் வாங்கிக் கொண்டேன் என்று தெரிந்தால், நிச்சயமாக என்னிடம் அவர் சண்டைக்கு வருவார். எனவே வேண்டாம்’’ என்றார்.

என்றாலும் சாய்பாபா விடவில்லை. அவர் மீண்டும் ஷாமாவை பார்த்து, ‘‘விஷ்ணு சகஸ்ரநாமம் புத்தகத்தின் சிறப்பை நீ இன்னும் உணரவில்லை. அதனால்தான் நீ வேண்டாம் என்று சொல்கிறாய். ஒரு தடவை நான் கடுமையான நெஞ்சுவலியால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தேன். அப்போது நான் இந்த விஷ்ணு சகஸ்ரநாமம் புத்தகத்தை எடுத்து என் மார்பின் மீது வைத்துக் கொண்டேன். அதன் பிறகுதான் எனது நெஞ்சுவலி குணமானது.

விஷ்ணு சகஸ்ரநாமம் மூலம் ஏதோ ஒரு சக்தி என் நெஞ்சுக்குள் பாய்வது போல் இருந்தது. அந்த சக்தியால்தான் எனது இதய படபடப்பு அடங்கியது. நான் உயிர் பிழைத்ததே இந்த விஷ்ணு சகஸ்ரநாமத்தால்தான். எனவே வேண்டாம் என்று சொல்லாதே. இதை வாங்கிக் கொள். தினமும் கொஞ்சம், கொஞ்சமாகப்படி. அது உனக்கு மிகப்பெரிய ஆனந்தத்தை தரும்’’ என்றார்.

பாபா வலியுறுத்திய பிறகு ஷாமாவுக்கு தயக்கம் போகவில்லை. ராமதாசி தன்னிடம் சண்டைக்கு வருவார் என்று மிகவும் பயந்தார். தேவை இல்லாமல் எதற்காக சீரடி தலத்தில் இன்னொருவருடன் சண்டை போட வேண்டும் என்று நினைத்தார். இதனால் பாபாவிடம், ‘‘எனக்கு இந்த புத்தகம் வேண்டாம்’’ என்று உறுதியான குரலில் மறுத்தார். உடனே அவரிடம் பாபா, ‘‘இந்த விஷ்ணு சகஸ்ரநாமம் புத்தகத்தை ராமதாசிக்கு சொந்தமானது என்று நினைக்காதே. நானே தருவதாக நினைத்துக் கொள். இதை படிப்பதற்கு தேவையான ஆர்வத்தை உன்னிடம் நான் ஏற்படுத்துகிறேன்.

விஷ்ணு சகஸ்ரநாமம் படித்தால் மலை போன்ற பாவமும் விலகி ஓடிவிடும். தீய எண்ணங்கள் மனதில் வரவே வராது. பிறப்பு& இறப்பு பிணியில் இருந்து ஒவ்வொருவரையும் காப்பாற்றும். அந்த அளவுக்கு விஷ்ணு சகஸ்ரநாமம் சக்தி வாய்ந்தது. இதை யார் ஒருவர் மிகவும் பிரயத்தனமாக பாராயணம் செய்கிறாரோ அவர்களது வாழ்க்கை பிரகாசமாகும்.

ஷாமா.... உன்னை சுத்தப்படுத்திக் கொள்ள விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்தான் சிறந்தது, சுலபமானது. வேறு வழியே இல்லை. எனவே இதை படித்தால் உன் ஆன்மீக வாழ்க்கை செழிப்பாகும். விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பதற்கு முன்பு புனித நீராட வேண்டும். தியானம் செய்ய வேண்டும் என்றெல்லாம் எந்த அவசியமும் இல்லை. எந்த சடங்கும், சாஸ்திரங்களும் இந்த பாராயணத்திற்கு இடையூறாக இருக்காது. 

எனவே விஷ்ணு சகஸ்ரநாமத்தை தருகிறேன். இதை இடைவிடாமல் படி. வேறு எதுவும் தேவையில்லை. நீ மோட்சத்துக்கு செல்ல இது ஒன்றுதான் வழி’’ என்றார். இவ்வாறு சொல்லிவிட்டு ஷாமாவின் கைகளில் விஷ்ணு சகஸ்ரநாமத்தை வலுக்கட்டாயமாகக் கொடுத்தார். இதனால் ஷாமா வேறு வழியில்லாமல் அந்த புத்தகத்தை வாங்கி வைத்துக் கொண்டார்.

இந்தநிலையில் கடைத்தெருவுக்கு சென்ற ராமதாசி திரும்பி வந்தார். தனது விஷ்ணு சகஸ்ரநாமம் புத்தகம் ஷாமா கையில் இருப்பதை பார்த்ததும் அவருக்கு கோபம் வந்தது. ‘‘என் புத்தகத்தை திருடவே பாபாவிடம் சொல்லி என்னை கடைக்கு அனுப்பினாயா? என் புத்தகத்தை ஒழுங்காக என்னிடம் தந்துவிடு’’ என்று கூச்சலிட்டார்.

இதைக் கண்டதும் ராமதாசியை பாபா சமரசம் செய்தார். ‘‘நான்தான் உன்னை கடைக்கு அனுப்பினேன். பக்குவமாக நடந்து கொள். எதற்காக இவ்வளவு ஆத்திரம்? இதை நீ கைவிட வேண்டும் என்பதற்காகத்தான் உன்னை கடைக்கு வேண்டுமென்றே அனுப்பினேன்.  இனிமேலாவது மனதை பக்குவப்படுத்து’’ என்றார். இப்படி ஒரே நேரத்தில் ஒரே நிகழ்வு மூலம் தனது 2 பக்தர்களை பாபா பக்குவப்படுத்தினார்.

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், ஷாமாவை அவர் விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்க வைத்ததுதான். இதேபோன்று பலதடவை அவர் விஷ்ணு சகஸ்ரநாமத்தை தனது பக்தர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். சில பக்தர்களின் குல தெய்வம் மற்றும் வழிபாடு முறைகளை அறிந்து அதற்கு ஏற்பக்கூட மூலமந்திரங்களை பாபா சொல்ல வைத்துள்ளார்.

தாஸ்கனு என்ற பக்தரின் நண்பர் ராவ்பகதூர் பிரதான். இவருக்கு சீரடி சாய்பாபாவை நேரில் பார்த்து தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஒரு நாள் அவர் சீரடிக்கு வந்தார். அப்போது துவாரகமயி பகுதியில் இருந்த பாபா ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருந்தார். ராவ்பகதூர் பிரதானுக்கு இது ஆச்சரியமாக இருந்தது.

பாபா என்ன பாடல் பாடுகிறார்? என்று சற்று  அருகில் சென்று காது கொடுத்து கேட்டார். ‘‘ஸ்ரீராம்... ஜெய்ராம்... ஜெய்ராம்... ஜெய்ராம்’’ என்று பாபா சொல்லிக் கொண்டே இருந்தார். பிரதானிடம் அவர், ‘‘நீயும் இதை சொல்லலாமே?’’ என்றார். இதைக் கேட்டதும் பிரதான் அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறினார்.

அவர் கூறுகையில், ‘‘என் குல தெய்வம் என்பதால் இந்த நாமத்தைதான் உச்சரிக்கச் சொன்னார்கள். ஆனால் நான் அலட்சியமாக இருந்துவிட்டேன். இன்று பாபா எனக்கு அந்த பாதையை காட்டிவிட்டார்’’ என்று நன்றியோடு சொன்னார்.
இதேபோன்று திருமதி.கபார்டே என்ற பக்தைக்கு, ‘‘ராஜாராம்... ராஜாராம்’’ என்று சொல்லும்படி பாபா அறிவுறுத்தினார். ‘‘இந்த மூல மந்திரத்தை சொல்ல சொல்ல உன் கஷடங்கள் அனைத்தும் விலகி நீ, இறைவனிடம் எளிதாக நெருங்க முடியும்’’ என்றும் பாபா தெரிவித்தார். இதைக் கேட்டதும் கபார்டே, ‘‘உண்மைதான் பாபா’’ என்று கைகூப்பி வணங்கினார்.

சில பக்தர்களுக்கு உபநிசத்தை எப்படி படிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துள்ளார்.  வறுமை, நோய் போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கும் பக்தர்களைப் பார்த்தால் விஷ்ணு சகஸ்ரநாமத்தின் சில பகுதிகளை பாராயணம் செய்ய சொல்லுவார். ஆனால், ஏனோ தெரியவில்லை பாபா பக்தர்களிடம் விஷ்ணு சகஸ்ரநாமத்தை படிக்கும் பழக்கம் அதிகம் இல்லாமல் உள்ளது. 

பாபாவின் புகழ் பரப்பிய நரசிம்ம சுவாமிஜி, ராதாகிருஷ்ண சுவாமிஜி ஆகியோர் அடிக்கடி விஷ்ணு சகஸ்ரநாமம் படியுங்கள் என்று சொல்வதை வழக்கத்தில் வைத்து இருந்தனர். ஏனெனில் அது பாபா காட்டிய முக்கிய பாதை ஆகும். இவ்வாறெல்லாம் பாதை காட்டிய பாபா, இறை அருள் பெற விரதம் தேவை இல்லை என்று வலியுறுத்தி கூறியுள்ளார்.
Tags:    

Similar News