செய்திகள்
கோப்புபடம்

நூல் விலை உயர்வை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு தலைமை செயலர் கடிதம்

Published On 2021-11-15 07:17 GMT   |   Update On 2021-11-15 07:17 GMT
கடந்த சில மாதங்களாக நூல் விலை அபரிமிதமாக உயர்ந்து வருகிறது. பின்னலாடை தயாரிக்க பயன்படுத்தும் ஒசைரி நூல், கிலோவுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது.
திருப்பூர்:

நூல் விலை 62 சதவீதம் உயர்ந்துள்ளதால் ஜவுளித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக தலைமை செயலர் இறையன்பு மத்திய ஜவுளித் துறை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக  நூல்  விலை அபரிமிதமாக உயர்ந்து வருகிறது. பின்னலாடை தயாரிக்க பயன்படுத்தும் ஒசைரி நூல், கிலோவுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. 

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் - ஏ.இ.பி.சி., திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம், சைமா உட்பட பின்னலாடை தொழில் துறை அமைப்பினர் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய - மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் தமிழக அரசின் தலைமை செயலர் இறையன்பு, மத்திய ஜவுளித் துறை செயலர் உபேந்திர பிரசாத் சிங்குக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 19 சதவீதமாக உள்ளது.

நாடு முழுவதும் உள்ள நூற்பாலைகளில் 45 சதவீதம் தமிழகத்தில் இயங்குகின்றன. குறு, சிறு, நடுத்தர ஜவுளி தொழில்கள் வாயிலாக 31 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

பருத்தி நூலிழை விலை ஒரே ஆண்டில் 62 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. 2020 நவம்பர் மாதம் கிலோ 210 ரூபாயாக இருந்த நூல் விலை  தற்போது ரூ.340 ஆக உயர்ந்துள்ளது. பருத்தி - பஞ்சு பதுக்கலால் நூல் விலை உயர்கிறது. 

நூற்பாலைகளின் நேரடி பருத்தி கொள்முதல் உச்சவரம்பை இந்திய பருத்தி கழகம் நிர்ணயிக்க வேண்டும். மத்திய அரசு நேரடியாக தலையிட்டு ஒட்டுமொத்த ஜவுளித் தொழிலை பாதுகாக்கும் வகையில் நூல் விலை உயர்வை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News