செய்திகள்
திருப்பூர் பல்லடம் சாலையில் கடைகள் முன்பிருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்ட காட்சி.

திருப்பூர் கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

Published On 2021-11-11 08:58 GMT   |   Update On 2021-11-11 08:58 GMT
ஒரு சில வியாபாரிகள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது பல இடங்களில் சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்ததே காரணம் என தெரியவந்தது. 

இதையடுத்து தீபாவளிக்கு முன்னதாக கடைகள் முன்பு சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பொருட்களை அகற்றுமாறு கடை உரிமையாளர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. 

தீபாவளி நேரம் என்பதால் அதிகாரிகளும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபடவில்லை. இந்தநிலையில் தீபாவளி முடிந்ததையடுத்து 2 தினங்களுக்கு முன்பு மீண்டும்  கடைக்காரர்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை. 

இதையடுத்து இன்று காலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள கடைகள் முன்பு ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

 
          அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகள். 

கடைகள் முன்பிருந்த பொருட்கள், விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன. இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனிடையே  ஒரு சில வியாபாரிகள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முறையாக இடத்தை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 

கடைக்குள் உள்ள பொருட்களையும் அகற்றுகின்றனர். இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்றனர். இருப்பினும் தொடர்ந்து திருப்பூர் பல்லடம் சாலையில் கடைகள் முன்பிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.
Tags:    

Similar News