செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள்

மதுரையில் 9,730 கிலோ ரேசன் அரிசி கடத்தல்- ஊழியர்கள் உள்பட 4 பேர் கைது

Published On 2021-11-09 09:48 GMT   |   Update On 2021-11-09 09:48 GMT
மதுரையில் 23 சாக்கு மூட்டைகளில் 48,499 ரூபாய் மதிப்பு உடைய 8230 கிலோ ரே‌ஷன் அரிசி மற்றும் 8475 ரூபாய் மதிப்புடைய 1500 கிலோ உடைந்த அரிசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை:

மதுரை அவனியாபுரத்தில் அரிசி கடத்தல் நடப்பதாக மண்டல ரே‌ஷன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகை செல்வம் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அவனியாபுரம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தியது.

அப்போது காவேரி நகரில் உள்ள தகர குடோனில் ரே‌ஷன் அரிசி பதுக்கப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அங்கு 23 சாக்கு மூட்டைகளில் 48,499 ரூபாய் மதிப்பு உடைய 8230 கிலோ ரே‌ஷன் அரிசி மற்றும் 8475 ரூபாய் மதிப்புடைய 1500 கிலோ உடைந்த அரிசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களில் 2 பேர் ரேசன் கடை ஊழியர்கள் முகமது ஜாகீர்அலி, செல்வகுமார் மற்றும் மணிகண்டன், மாரிச்செல்வம் என்பது தெரியவந்தது.

அவனியாபுரம் காவிரி நகரில் மாரிச்செல்வம் ரே‌ஷன் அரிசி கடத்துவதற்காகவே குடோன் ஒன்றை வைத்து உள்ளார். இந்த கடத்தலில் அவருக்கு மணி கண்டன், சந்தானம் ஆகிய 2 பேரும் உதவியாக இருந்துள்ளனர்.

நியாய விலைக் கடைகளில் இருந்து ரேசன் அரிசியை வாங்கி கொண்டு வருவதற்காக, இந்த கும்பல் 3 மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி உள்ளது. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மாரிச்செல்வம் கும்பலுக்கு ரேசன் கடை ஊழியர் முகமதுஜாகீர்அலி மற்றும் தற்காலிக எடை போடுபவராக வேலை பார்க்கும் செல்வகுமார் ஆகிய 2 பேரும் உடந்தையாக இருந்து செயல்பட்டு வந்தனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

மதுரை மாநகர ரேசன் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனர். இதுதவிர தப்பி ஓடி தலைமறைவான சந்தானம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.



Tags:    

Similar News