செய்திகள்
கடல் சீற்றம்

மகாபலிபுரம் முதல் எண்ணூர் வரை சென்னையில் கடல் சீற்றம்

Published On 2021-11-09 07:53 GMT   |   Update On 2021-11-09 09:36 GMT
கடலோர கிராமங்களில் வசிப்பவர்கள் கடலின் அலைகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். கடல் சீற்றம் மேலும் அதிகரித்தால் வீடுகளுக்குள்ளும் வெள்ளம் வந்துவிடுமோ என்ற பீதியில் இருக்கிறார்கள்.

சென்னை:

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் வங்கக் கடலில் அடுத்த 12 நேரத்திற்குள் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதையடுத்து மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக மகாபலிபுரம் முதல் எண்ணூர் தாழங்குப்பம் வரையிலான மீனவ கிராமங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த காற்றழுத்தம் உருவாகுவதை அடுத்து பல இடங்களில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இது பற்றி திருவான்மீயூரை சேர்ந்த மீனவர் பாஸ்கர் கூறியதாவது:-

வழக்கமாக கடல் அலைகள் 1 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு வீசும். ஆனால் இன்று பல இடங்களில் அலைகள் ஆக்ரோ‌ஷமாக எழுகின்றன. அதாவது 3 முதல் 7 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழுந்தன. அதாவது 20 அடிக்கு மேல் அலைகள் எழுந்தன. இதனால் யாரும் கடலுக்குள் செல்லவில்லை என்றார்.

கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடலுக்குள் படகுகள் அடித்து செல்லும் வாய்ப்பு உள்ளது. அதை தவிர்ப்பதற்காக மீனவர்கள் தங்கள் படகுகளை கரைகளில் பத்திரமாக கட்டி வைத்துள்ளனர். கட்டு மரங்களை இழுத்து வந்து கரையில் வெகு தூரத்தில் கட்டி வைத்துள்ளனர்.

கடலோர கிராமங்களில் வசிப்பவர்கள் கடலின் அலைகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். கடல் சீற்றம் மேலும் அதிகரித்தால் வீடுகளுக்குள்ளும் வெள்ளம் வந்துவிடுமோ என்ற பீதியில் இருக்கிறார்கள்.

Tags:    

Similar News