செய்திகள்
கோப்புப்படம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 12-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

Published On 2021-11-09 04:50 GMT   |   Update On 2021-11-09 04:50 GMT
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அதிவேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்குச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் சில நாள்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது.

மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அதி வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்குச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி முதல் மண்டபம், பாம்பன், ராமேசுவரம், தனுஷ்கோடி, கீழக்கரை, வாலிநோக்கம், மாரியூர், மூக்கையூர், ரோஸ்மா நகர் வரையிலான பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் கோபிநாத் கூறுகையில், காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மன்னார் வளைகுடா பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரை காற்று வீசலாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால், வருகிற 12-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
Tags:    

Similar News